உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்காசி கோயில்களில் இன்று புத்தாண்டு சிறப்பு வழிபாடு!

தென்காசி கோயில்களில் இன்று புத்தாண்டு சிறப்பு வழிபாடு!

தென்காசி: தென்காசி கோயில்களில் இன்று ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஆங்கில புத்தாண்டு 2013 இன்று (1ம் தேதி) பிறப்பதை முன்னிட்டு தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது. தெற்குமாசி வீதி கற்பக விநாயகர் கோயிலில் காலையில் கணபதி ஹோமத்துடன் சிறப்பு வழிபாடு துவங்குகிறது. குலசேகரநாதர் கோயில், விண்ணகர பெருமாள் கோயில், பொருந்தி நின்ற பெருமாள் கோயில், முடுக்கு விநாயகர் கோயில், மேலமுத்தாரம்மன் கோயில் மற்றும் கூளக்கடை பஜார் சந்தி விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.

குற்றாலம் குற்றாலநாதர் கோயில், இலஞ்சி குமாரர் கோயில், குன்றக்குடி லட்சுமி நாராயணா ஜெய ஆஞ்சநேயர் கோயில், பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில், புளியரை தட்சிணாமூர்த்தி கோயில், செங்கோட்டை சிவன் கோயில், ராமபக்த ஆஞ்சநேயர் கோயில், குத்துக்கல்வலசை பசிதுஷ்டராய கண்ட விநாயகர் கோயில், அண்ணாநகர் சுபிட்ச வழித்துணை ஆஞ்சநேயர் கோயில் மற்றும் சுற்று வட்டார பகுதி கோயில்களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது.

தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் நள்ளிரவில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் இதர மதத்தினரும் திரளானோர் கலந்து கொண்டனர். தென்காசி ஏ.ஜி.சர்ச், சி.ஐ.எஸ்.சர்ச், சக்திநகர் சி.எஸ்.ஐ.சர்ச், மேலமெஞ்ஞானபுரம், மேலகரம், குற்றாலம், வல்லம், இலஞ்சி, பிரானூர், செங்கோட்டை, பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், இலத்தூர், சாம்பவர்வடகரை, சுந்தரபாண்டியபுரம், ஆய்க்குடி, மத்தளம்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள சர்ச்களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பொதுமக்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நேற்று இரவு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு பரிசு வழங்கி மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !