திருச்செந்துார் கடற்கரையில் மீண்டும் மண் அரிப்பு; புனித நீராட பக்தர்கள் தவிப்பு
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் கடற்கரை பகுதியில் தொடர்ந்து மண் அரிப்பு அதிகரித்து வருவதால் பக்தர்கள் புனித நீராட முடியாமல் தவித்து வருகின்றனர்.
திருச்செந்துார் சுப்ர மணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. விடுமுறை நாள் என்பதாலும், சபரிமலை சீசன் என்பதாலும் நேற்று வழக்கத்தைவிட பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அமாவாசை, பௌர்ணிமி நாட்களில் கடல் உள்வாங்கியும், சீற்றத்துடனும் காணப்படுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. சில நாட்களாகவே கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், கோவிலை ஒட்டிய கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு சுமார் 6 அடி பள்ளம் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் கடலில் புனித நீராட செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். கடல் சீற்றத்துடன் உள்வாங்கியும் காணப்படுவதால் புனித நீராடும் பக்தர்களுக்கு எலும்பு முறிவு காயங்கள் ஏற்படு கிறது. கடல் பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பை சரி செய்ய பணிகள் நடந்து வருகிறது. இருப்பினும், அடிக்கடி ஏற்படும் மண் அரிப்பால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டு கிறது. கோவிலில் இருந்து சுமார் 100 மீ நீளத்திற்கு 6 அடிக்கு மேல் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும் பக்தர்கள் மண் சரிவில் சிக்கி கீழே விழும் நிலை இருந்து வருகிறது. பக்தர்கள் கடலில் புனித நீராடும்போது கவனமாக இருக்கும்படி போலீசாரும், கடற்கரை கோவல் பாதுகாப்பு பணியாளர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.