கஷ்டங்களை போக்கும் சிவபெருமான்
ஆலகால விஷத்தை குடித்து, அழிவில் இருந்து உலகை காப்பாற்றியவர் சிவபெருமான். இவரது திருவிளையாடல் நடந்த நாளாக கருதப்படுவதே பிரதோஷ நாளாகும். பிரதோஷ நாளன்று சிவனை வழிபடுவது, மிகவும் சிறப்பானது. இந்நாளில் சிவனை பக்தியோடு பூஜித்தால், அனைத்து கஷ்டங்களும் விலகி, வாழ்வு வளம் பெறும் என்பது ஐதீகம்.
திங்கட் கிழமை சிவனுக்கு உகந்த கிழமையாக கருதப்படுகிறது. இந்த கிழமையில் வரும் பிரதோஷம், மிகவும் சிறப்பானது. திங்கட் கிழமையும், பிரதோஷமும் சேர்ந்து வருவது, மிகவும் அபூர்வம். இந்நாளில் சிவனை பக்தியுடன் வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பது, மக்களின் நம்பிக்கை.
பிரதோஷ நாளன்று, பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து, சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, வீட்டு பூஜை அறையில் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி, விரதத்தை தொடங்க வேண்டும். விரதத்தை தொடங்கும் போது, கையில் சிறிதளவு பச்சரிசியை எடுத்து, மனமுருகி பக்தியோடு சிவபெருமானை வேண்டிக் கொண்டு, பறவைகளுக்கு தீவனமாக தர வேண்டும். இப்படி செய்வதால், சிவபெருமானின் அருளுடன், சந்திர பகவானின் அருளையும் பரிபூரணமாக பெறலாம் என்பது ஐதீகமாகும்.
பிரதோஷ தினத்தன்று மாலை 4:30 மணி முதல், 6:00 மணிக்குள் ஒரு தாம்பாள தட்டில், பச்சரிசியை பரப்பி, அதன் மீது, 12 நெல்லிக்கனி தீபத்தை, வட்ட வடிவில் ஏற்றி வைக்க வேண்டும். தீபம் ஏற்றுவதற்கு முன், தாம்பாள தட்டின் நடுவே, ஒரு வெற்றிலையை வைத்து, இதன் மீது மஞ்சளால் விநாயகர் மற்றும் லிங்கத்தை பிடித்து வைக்க வேண்டும். அதன்பின் வட்டமாக நெல்லிக்கனி தீபத்தை ஏற்ற வேண்டும்.
தீபம் ஏற்றிய பின், ‘ஓம் நமசிவாய’ எனும் மந்திரத்தையும், ‘ஓம் சிவாய நம’ எனும் மந்திரத்தையும், ‘ஓம் சிவ சிவ ஓம்’ எனும் மந்திரத்தையும், 54 முறை கூறி மஞ்சளால் செய்து வைத்த சிவலிங்கத்திற்கு, வாசனை மிகுந்த மலர்களாலோ வில்வ இலைகளாலோ அர்ச்சனை செய்ய வேண்டும்.
தீபச்சுடரொளியை பார்த்தபடி, உங்களுடைய கஷ்டங்கள், வேண்டுதல்களை சிவபெருமானிடம் மனமுருகி கூறி, வழிபட வேண்டும். இவ்வாறு கூறி முடித்த பின், கற்பூர தீப துாப ஆராதனை காட்டி, விரதத்தையும் நிறைவு செய்து கொள்ளலாம். அன்று இரவு முழுதும், மஞ்சளால் பிடிக்கப்பட்ட விநாயகரும், சிவலிங்கமும் பூஜை அறையில் அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலையில், அதை தண்ணீரில் கரைத்து வீடு முழுதும் தெளிக்க வேண்டும். அந்த மஞ்சளை வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் தங்களுடைய நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிரதோஷ நாளன்று இந்த வழிமுறையில், சிவ பெருமானை வழிபட்டால், வாழ்வில் கடன் தொல்லை, குடும்ப பிரச்னை, பணக்கஷ்டம் உட்பட அனைத்து கஷ்டங்களும் நீங்கும். நோய்கள் குணமாகும்; கேட்ட வரங்கள் கிடைக்கும்.