உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் திருத்தல மரங்கள் வளர்ப்பு திட்டம்

திருமலையில் திருத்தல மரங்கள் வளர்ப்பு திட்டம்

திருப்பதி; கோவில் என்றால் அதில் முக்கிய இடம் வகிப்பது ‘துவஜஸ்தம்பம்’ எனப்படும் கொடிமரமாகும். கொடிமரம் என்பது வெறும் மரம் அல்ல அது அசைக்க முடியாத பக்தி, புனிதம் மற்றும் தெய்வீக இருப்பின் அடையாளமாகும்.


ஆகம சாஸ்திரங்களின் விதிகளின்படி, கொடிமரம் என்பது ஒரே துண்டாக, நீளமாக, நேராக வளரும்,  தேர்ந்தெடுக்கப்பட்ட மரத்தின் தண்டிலிருந்து உருவாக்கப்பட வேண்டும். இந்தத் தேர்வு ஆன்மீக, ஜோதிட மற்றும் சடங்கு விதிமுறைகளுக்கு முற்றிலும் இணங்க நடைபெற வேண்டும்.ஆகம மரபுகளின் படி, கொடி மரம் தேக்கு, கினோ,டெர்மினாலியா மற்றும் ஷோரியா வகை மரங்களில் இருந்து பெறப்படுகிறது.


நன்கு  வளர்ந்து முழு முதிர்ச்சியடைந்த பின்னரே, அந்த மரம் விதிப்படி சடங்குகள் செய்து புனிதப்படுத்தப்பட்டு வெட்டப்படுகிறது. ஆகம அளவுகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பின், மரத்தால் செய்யப்பட்ட துவஜஸ்தம்பம் பொதுவாக செம்பு அல்லது பித்தளை போன்ற உலோகங்களால் மூடப்படுகிறது. திருமலையிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் போன்ற உயரிய திருத்தலங்களில்,  தங்கம் பூசப்பட்ட அலங்காரத்துடன் அமைக்கப்படுகிறது. கருவறையின் மேல் அமைந்த விமானத்திற்கும்  ராஜகோபுரமும் இடையே நிறுவப்படும் கொடிமரத்தில், பெருமாளின் வாகனமான கருடனின் கொடி பறக்க விடப்படுகிறது. இந்தக் கொடி ஏற்றமே, கோவில் விழாக்களின் துவக்கத்தை அறிவித்து, உலகமெங்கும் உள்ள தெய்வீக அருளை அழைக்கிறது.


இப்படி கோவில் கொடிமரத்திற்கென பலவித சிறப்புகள் இருந்தாலும் புதிதாக கட்டப்படும் கோவிலுக்கும்,ஏற்கனவே நீண்ட காலமாக கோவிலில் உள்ள கொடி மரத்தை மாற்றுவதற்கும் தேவையான கொடிமரம் கிடைப்பது என்பது அரிதான விஷயமாக இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள பல கோவில்களில் கொடி மரம் மாற்ற வேண்டியுள்ளது ஆனால் நல்ல தரமான தெய்வீக சக்தி கொண்ட கொடி மரத்திற்காக காத்திருக்கின்றனர்.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் 100 ஏக்கர் பரப்பளவில் திருமலையில் திருத்தல கொடி மரங்களை வளர்பதற்கான தெய்வீக வனத்தை உருவாக்கும் திட்டம் துவங்கப்பட உள்ளது. இந்த தெய்வீக வன  திட்டத்தின் கீழ் வளர்க்கப்படும் மரங்கள் புதிதாகவும், மாற்றாகவும் தேவைப்படும் கோவில்களுக்கு வழங்கப்படும்.கொடிமரத் தட்டுப்பாடு என்ற வார்த்தைக்கு இனி இடமிருக்காது என திருமலை  கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !