உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாவையில் அனைத்து விஷயங்களும் பொதிந்துள்ளன; ஆன்மிக சொற்பொழிவில் தகவல்

திருப்பாவையில் அனைத்து விஷயங்களும் பொதிந்துள்ளன; ஆன்மிக சொற்பொழிவில் தகவல்

கோவை: கோயமுத்துார்  திருப்பாவை சங்கம், ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானம் ஆகியவை சார்பில்,  67ம் ஆண்டு மார்கழி மாத திருப்பாவை உபன்யாசம், ராம் நகர் கோதண்டராமர் தேவஸ்தானத்தில் நடந்து வருகிறது.


இதில், ஆன்மிக சொற்பொழிவாளர் வேங்கடேஷ் பேசியதாவது:  ஆண்டாள், கண்ணனை மணக்க நினைத்தார். அதற்காக மார்கழியில் நோன்பு நோற்றார். ஆயர்பாடியில் கோபியர் எப்படி நோன்பு நோற்றார்களோ, அதே வழியில் ஆண்டாளும் கண்ணனை அடைய வேண்டும் என்று நினைத்து, மார்கழியில் நோன்பு நோற்றார். அப்போது அவர் பாடியது தான் திருப்பாவை என்ற பிரபந்தம்.  திரு என்பது மங்களத்தை குறிக்கும். பாவை என்பது நோன்பை குறிக்கும். மங்களகரமான நோன்பை நோற்று அதற்கேற்ற பாசுரத்தை பாடியதால், அது திருப்பாவை என்று பெயர் பெற்றது.  பாவை என்றால் விக்ரஹம் என்று பொருள். விக்ரஹமாக இருக்கும் நாராயணனை வணங்கி, நோன்பு நோற்பதாலே அதற்கு திருப்பாவை என்று பொருள். மார்கழி முழுக்க, ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு பாசுரத்தை வழங்கி, பக்தர்களை பாராயணம் செய்ய வைத்தவர் ஆண்டாள். திருப்பாவையில் உள்ள முப்பது பாடல்களில் அறிவியல், கணிதம், வரலாறு, பூகோளம், தத்துவம், மருத்துவம், ஞானம் என்று அனைத்து விஷயங்களும் பொதிந்துள்ளன. இதை ஒவ்வொருவரும் பாராயணம் செய்ய வேண்டும். அதில் பொதிந்துள்ள கருத்துக்களையும், பாடல்களையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.  இவ்வாறு, அவர் பேசினார். திரளான பக்தர்கள் திரண்டிருந்தனர். அன்றாடம் காலை 7:30 லிருந்து 9 மணி வரையிலும், மாலை 6:30 லிருந்து 8:15 மணி வரையிலும், திருப்பாவை உபன்யாசம் நடைபெறுகிறது. இரண்டாம் நாளான இன்று நிகழ்த்திய உபன்யாசத்தில்,  திருப்பாவையின் இரண்டாம் பாசுரமான வையத்து வாழ்வீர்கள் என்ற பாடலை, பாராயணம் செய்து சொற்பொழிவு நிகழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !