விழுப்புரம் சங்கரமடத்தில் மகா பெரியவர் ஆராதனை விழா
விழுப்புரம்: விழுப்புரம் சங்கரமடத்தில் மகா பெரியவரின் 32வது ஆராதனை விழா நடைபெற்றது.
விழுப்புரம் சங்கர மடம் காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவதார ஸ்தலமாக உள்ளது. இங்குள்ள வேத பாடசாலை மூலம் மாணவர்களுக்கு வேதம் கற்பிக்கப்படுகிறது. சங்கர மடத்தில் மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 32வது ஆராதனை விழா நடந்து வருகிறது. வேதம் படித்த மாணவர்களுக்காக, வேத பாடத்தில் போட்டி நடந்தது. வட தமிழகத்திலிருந்து பல்வேறு பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் 80 பேர் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில் பங்கேற்று 12 பேர் பரிசு பெற்றனர். கடந்த 15ம் தேதி மகா பெரியவரின் மகிமை என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. நேற்று முன்தினம் கோ பூஜை, கணபதி பூஜையும், 12 கலசங்கள் வைத்து ருத்ர ஏகாதசி பூஜையும், ஏகாதசி ஜெபம் மற்றும் ஹோமங்கள் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், கலச அபிஷேக ஆராதனையும் நடைபெற்று, சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் 12:30 மணிக்கு மகா தீபாராதனையும், அன்னதானம் வழங்கப்பட்டது. சங்கர மடம் மேலாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.