திருப்பரங்குன்றத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பே உயிர் தியாகம்; அன்று குட்டி; இன்று பூர்ணசந்திரன்
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி மதுரையில் நேற்றுமுன்தினம் பூர்ணசந்திரன் 40, தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார். இவருக்கு முன்னோடியாக திருப்பரங்குன்றம் கோயிலை ஐரோப்பியர்களின் படையெடுப்பில் இருந்து காக்க, கோபுரத்தின் உச்சியில் இருந்து குட்டி என்பவர் குதித்து உயிர் தியாகம் செய்தது ப.சிவனடி என்பவர் எழுதிய இந்திய சரித்திரக் களஞ்சியம் (1791- 1800) நுாலில் பக்கம் எண் 94ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது:
தொன்மையும் பல சமயத் தொடர்பும் உடைய திருப்பரங்குன்றத்தில் 1792 ல் நடந்த ஒரு நிகழ்ச்சி நெஞ்சத்தை உருக்குவதாய் உள்ளது. மதுரையில் 1792 ல் தங்கியிருந்த ஐரோப்பிய படையினர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கும் சேதங்களை உண்டாக்கினர். ஐரோப்பிய படை திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் புக முயன்றது. இங்கு மலையை குடைந்தெடுத்த பெரிய குடவரை கோயில் இருப்பதாலும் மாமண்டபங்களையன்றி, மாமதில் சூழ்ந்த திருச்சுற்றுகள் இல்லாததாலும் புறச்சமயத்தவர் (ஐரோப்பியர்) இதனுள்ளே நுழைவது கோயிலை தீட்டுப்படுவதற்கு ஒப்பாகும். ஐரோப்பியர் திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் நுழைவதை பொறுக்க முடியாத, கோயில் சேவகர் முத்துக்கருப்பன் மகனான குட்டி என்பவர், அப்படையினர் நுழைவதை தடுக்க கோபுரத்தில் ஏறி அங்கிருந்து கீழே விழுந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டார். வெட்டுவான் என்போர் கோயிலுக்காக தம் கழுத்தை தாமே அறுத்து உயிர்ப்பலி தரும் வழக்கம் சில கோயில்களில் இருந்தது.
ஆனால் கோயிலின் துாய்மையை காக்க ஒருவர் இவ்வாறு கோபுரத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்தது புதிய செய்தி. குட்டியின் எதிர்பாராத இச்செயலைக் கண்ட ஐரோப்பிய படையினர், கோயிலினுள் நுழைவதை கைவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இவ்வாறு கோயிலின் துாய்மை காக்க உயிரிழந்த குட்டியை கோயில் அலுவலர்கள் பாராட்டி அவரது குடும்பத்திற்கு ரத்தக் காணிக்கை என்னும் பெயரில் நிலம் அளித்தனர். இவ்வாறு அந்த நுாலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. – நமது சிறப்பு நிருபர் –