திருப்பரங்குன்றம் மலை உண்மை தன்மையை தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலையின் உண்மை தன்மை குறித்து தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார். திருப்பரங்குன்றத்தில் கைது செய்யப்பட்டு திருநகர் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 17 பேரை அவர் சந்தித்து பேசிய பின் கூறியதாவது: அமைதியாக இருந்த உள்ளூரில் உள்ள ஹிந்துக்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தனக்கூடு நிகழ்விற்கு உள்ளூர் அடையாள அட்டை இல்லாதவர்களை யாரையும் அனுமதிக்க கூடாது. ஸ்டாலின் அரசு ஹிந்து விரோத நடவடிக்கையால் நம்மை ஹிந்துக்கள், முஸ்லிம்கள் என்று பேச வைத்திருக்கிறார்கள். தர்கா இருக்கும் 33 சென்ட்க்கு வெளியில் இருக்கும் முருகன் கோயில் தளத்தில் இருப்பதுதான் கல்லத்தி மரம்.
அங்கு அவர்கள் கொடி எப்படி இருக்கலாம். அந்த கொடி அங்கிருந்து அகற்றப்பட வேண்டும். கல்லத்தி மரம் முருகப்பெருமானின் தலவிருட்சம். அது ஆக்கிரமிப்பு 33 சென்ட் வெளியில் யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்பது பிரிவியூ கவுன்சில் தீர்ப்பு. முஸ்லிம்கள் மலையில் சென்று சந்தனக்கூடு நடத்தலாம் என்றால் 21 நாட்களாக காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ஹிந்துக்கள் அனுமதிக்கப்படவில்லை. நாளை முதல் ஹிந்துக்கள் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு தரிசனத்திற்கு அனுமதிக்க எந்த தடையும் இருக்கக்கூடாது. அப்படி இல்லை என்றால் காசி விஸ்வநாதர் கோயில் செல்வதற்கான வேலைகளை பா.ஜ., செய்யும். சிக்கந்தர் பாதுஷாவிற்கு கோரிப்பாளையம் பகுதியில் கல்லறை உள்ளது என்று சுற்றுலாத் துறை கையேடு சொல்கிறது. ஒருவருக்கு இரண்டு இடத்தில் கல்லறை எப்படி இருக்க முடியும். திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும். அதில் உருவங்களை பார்த்தாலே ஹிந்து உருவம் தெரியும். அந்த அமைப்பின் உண்மை தன்மையை பற்றி தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.