உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிம்மம் : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026

சிம்மம் : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026

மகம்: எச்சரிக்கை தேவை


ஞான மோட்சக் காரகனான கேது, ஆத்மக் காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2026   கவனமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டிய ஆண்டாகும். குடும்பம், தொழில், பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் அக்கறை கொள்வது நன்மையாகும். உடல்நிலை, வருமானம், நட்பு, காதல் என அனைத்திலும் போராட்டத்தை சந்திக்க நேரும். 


சனி சஞ்சாரம் 

ஆண்டின் தொடக்கத்தில் கண்டகச்சனியாக சஞ்சரிப்பவர் மார்ச் 6 முதல் அஷ்டமச்சனியாக சஞ்சரிப்பதால், நன்றாகப் பழகி வந்தவர்களும் உங்களுக்கு எதிராக மாறுவர். குடும்பத்திலும் நிம்மதி என்பது இல்லாமல் போகும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். சிலர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் அல்லது பிறரின் பழிச்சொல்லுக்கும், அவமானத்திற்கும் ஆளாக நேரும்.


ராகு, கேது சஞ்சாரம் 

நவ.13 வரை ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் நிறையவே படிப்பினைகள் உண்டாகும். என்னதான் முயற்சித்தாலும் குழப்பத்தில் இருந்து வெளியில் வர முடியாமல் போகும். தவறானவர்களை நம்பி அவர்களால் சங்கடத்திற்கு ஆளாக நேரும். சுய ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருப்பவர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் போடும் திட்டங்களில் பின்னடைவு ஏற்பட்டு விதியின் வழியே போக வேண்டிய நிலை உண்டாகும் என்பதால் அனைத்திலும் நிதானம் தேவை. நவ. 13 முதல் இந்த நிலையில் மாற்றம் ஏற்படும். உங்கள் நிலை உயரும். இதற்கு முன்பிருந்த நெருக்கடிகளும் பிரச்சனைகளும் சங்கடங்களும் இருந்த இடம் தெரியாமல் போகும். உடல்நிலை, மனநிலை சீராகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். எதிர்ப்பு விலகும்.


குரு சஞ்சாரம் 

மார்ச் 17 முதல் லாப குருவாக சஞ்சரித்து வரவை அதிகரிப்பார். துணிச்சலாக நடைபோட வைப்பார். குழந்தை பாக்கியத்தை தருவதுடன் பிள்ளைகளால் பெருமை அடையும் நிலையை தருவார். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைக்கு முடிவு கிடைக்கும். திருமண வயதினரை மணமேடை ஏற வைப்பார். தம்பதிக்குள் ஒற்றுமையை அதிகரிப்பார். மே 26 முதல் விரய குருவாக சஞ்சரிப்பவர் அலைச்சலையும் செலவையும் அதிகரித்தாலும் அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் சனியின் பாதிப்பு நெருங்காது.  வாகனம் வாங்கும் கனவு நனவாகும். நோய் நொடி, நெருக்கடி என நிலை மாறும். அக். 20 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பவர் பொருளாதார நிலையை உயர்த்துவார். திருமணம், குழந்தை, வீடு என கனவை நனவாக்குவார். பணப்புழக்கம் கூடும். 


சூரிய சஞ்சாரம் 

ஜன.15 – பிப்.12, மே15 – ஜூலை16 காலங்களிலும், அக்.18 – நவ.16 காலத்திலும் உங்களுக்கிருந்த நெருக்கடி, சங்கடம், பிரச்னை, போராட்டம் எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும். உங்கள் முயற்சி வெற்றியாகும். செல்வாக்கு உயரும். எடுத்த பணி முடிவிற்கு வரும். எதிரி தொல்லை விலகும். வழக்கு விவகாரம் வெற்றியாகும் தொழில் முன்னேற்றமடையும். லாபம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.


பொதுப்பலன் 

சப்தம ராகு, ஜென்ம கேது, அஷ்டமச்சனி என பயமுறுத்தினாலும், மார்ச்12 – ஏப்.11 காலத்தில் சனி அஸ்தமனம், ஜூலை 15 – நவ.30 காலத்தில் வக்ரம் என்ற நிலையாலும், மே 26 – அக்.20 வரை சனிக்கு குருவின் பார்வை உண்டாவதாலும் சனியின் பாதிப்பு விலகும். குரு சஞ்சாரம் மற்றும் பார்வைகளுடன், 3,6,11 ல் சஞ்சரிக்கும் காலத்தில் செவ்வாய், 3,6,10,11 ல் சஞ்சரிக்கும் காலத்தில் சூரியன் உங்களின் முயற்சிகளை வெற்றியாக்குவர். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பர்.  முன்னேற்றம் தருவார்.  வருமானம் உயரும். பணப்புழக்கம் கூடும்.  குடும்பம், தொழில், வேலையில்  நிம்மதி கிடைக்கும். செல்வம், செல்வாக்குடன் வாழும் நிலை ஏற்படும்.


தொழில் 

தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி, பிரச்னை விலக ஆரம்பிக்கும். சூழல் அறிந்து செயல்பட்டு எதிர்பார்த்த முன்னேற்றம், ஆதாயத்தை அடைவீர்கள். நீண்டநாளாக முயற்சி செய்தும் கிடைக்காமல் போன ஒப்பந்தம் இப்போது கிடைக்கும். கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், கால்நடை, இயந்திரத்தொழில், மருத்துவம், மெடிக்கல், கெமிக்கல், எக்ஸ்போர்ட், ரியல் எஸ்டேட், ஹார்ட்வேர், ஷேர் மார்க்கெட், சினிமா, சின்னத்திரை, ஜூவல்லரி, ஆடை, ஆபரணத் தொழில்கள் லாபம் தரும் என்றாலும் முதலீட்டில் எச்சரிக்கை அவசியம்.


பணியாளர்கள்  

வேலையில் இருந்த நெருக்கடி நீங்கி எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும் என்றாலும், வேலை பார்க்கும் இடத்தில் நேர்மையாக நடப்பது அவசியம். வீண் ஆசைக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது அவசியம். வெளிநாட்டில் வேலை பார்த்து வருபவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. சிலர் இருக்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலை தேட நேரும். தனியார் நிறுவன பணியாளர்கள் நிர்வாகத்திடம் பணிவாக இருப்பது நன்மையாகும்.


பெண்கள் 

நெருக்கடி வந்தாலும் அதை சமாளிக்கும் நிலை உண்டாகும். உயர் கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு என கனவு நனவாகும். கணவரின் அன்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வேலையில் இருந்த நெருக்கடி விலகும். இடமாற்றம் கிடைக்கும். 


கல்வி 

தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்வர். மருத்துவம், இன்ஜினியரிங் படிக்கும் எண்ணம் நிறைவேறும். 


உடல்நிலை 

பரம்பரை, தொற்று நோய், விபத்து என சிரமப்படுவோருக்கு மருத்துவச் செலவு குறையும். என்ன நோய் என அறிய முடியாமல் தவிப்போருக்கு தீர்வு கிடைக்கும். ஆரோக்கியமாக வாழும் நிலை உண்டாகும்.


குடும்பம் 

குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்து நடப்பர். வாகனம், சொத்து சேரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடக்கும். 


பரிகாரம் : சனீஸ்வரருக்கு தீபம் ஏற்றி வர பயம் போகும். முன்னேற்றம் ஏற்படும்.


பூரம்: நிதானம் அவசியம்


அதிர்ஷ்டக் காரகனான சுக்கிரன், ஆத்மக் காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2026 விழிப்புடன் செயல்பட வேண்டிய ஆண்டாகும். எந்த ஒன்றிலும் உங்களை முன்னிறுத்திக் கொள்வதற்காக வேகமாக நீங்கள் செயல்பட்டாலும் அதில் தடையும் தாமதமும் ஏற்படும். நட்பாக நீங்கள் எண்ணியவர்களும் உங்களுக்கு எதிராக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். உங்கள் அந்தஸ்தையும் செல்வாக்கையும் நிலைநிறுத்திக் கொள்வதற்காக கடினமாக உழைப்பீர்கள். அவ்வப்போது உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.


சனி சஞ்சாரம் 

மார்ச் 6 வரை கண்டச் சனியாகவும் அதன்பின் அஷ்டமச் சனியாகவும் சஞ்சரிப்பவர், உடல்நிலையில் சங்கடத்தையும், தாய், தந்தை உடல்நிலையில் பாதிப்பையும் ஏற்படுத்துவதுடன் உங்கள் செல்வாக்கிலும் சோதனையை உண்டாக்குவார்.  தொழிலில், வேலையில் சங்கடத்தை ஏற்படுத்துவார். குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலையை உருவாக்குவார். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலைக்கு ஆளாக்குவார். பிள்ளைகளால் சங்கடம் அனுபவிக்க வைப்பார். பூர்வீக சொத்துகளில் பிரச்னை  ஏற்படுத்துவார் என்றாலும், மார்ச் 12 – ஏப். 11, ஜூலை 15 – நவ.30 காலத்தில் அஸ்தமனம், வக்கிரம் ஆகிய நிலைகளால் அஷ்டமச் சனியின் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள். எடுத்த வேலைகளில் வெற்றி அடைவீர்கள்.


ராகு, கேது சஞ்சாரம் 

நவ. 13 வரை ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது ஜென்ம ராசியிலும் சஞ்சரிப்பதால், உடல்நிலை மனநிலையில் சங்கடம் ஏற்படும். யாரை நம்புவது யாரை நம்பக்கூடாது என்ற முடிவிற்கு வர முடியாமல் தவிப்பீர்கள். பிறர் செய்யும் துரோகத்தால் நிறைய படிப்பினையை கற்றுக் கொள்வீர்கள்.  தவறான நட்பால் தம்பதிகளுக்குள் பிரச்னை உண்டாகும் என்பதால் அனைத்திலும் நிதானம் தேவை. நவ.13 முதல் இந்த நிலை மாறும். மனம் தெளிவடையும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் வாழ்க்கை வளமாகும். உடல் பாதிப்பு இருந்த இடம் தெரியாமல் போகும். வழக்கு  சாதகமாகும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களும்  சமாதானம் பேசுவர்.


குரு சஞ்சாரம்

மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக  சஞ்சரிப்பதால், 2026ல் லாபம், விரயம், ஜென்மம் என 3 இடங்களிலும் சஞ்சரித்து பலன் வழங்கிட உள்ளார். ஆண்டின் தொடக்கத்தில் வரவை அதிகரிப்பார். குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்துவார். பிள்ளைகளால் பெருமை சேர்ப்பார். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னையை முடித்து வைப்பார். திருமண வயதினருக்கு மணமாலை கழுத்தில் சேரும். தம்பதி ஒற்றுமையை அதிகரிப்பார். ஆண்டின் மத்தியில் அலைச்சல், செலவு ஏற்படலாம். புதிய வாகனம் வாங்க வைப்பார். நோய், நெருக்கடி என்ற நிலையில் இருந்து விடுவிப்பார். அதிர்ஷ்ட வாய்ப்பை வழங்குவார். ஆண்டின் இறுதியில் திருமணம், குழந்தை, வீடு என்ற கனவை நனவாக்குவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பார். புதிய இடம், வீடு  வாங்க வைப்பார். பொருளாதார நிலை உயரும். 


சூரிய சஞ்சாரம் 

ஜன.15 – பிப்.12, மே 15 – ஜூலை 16 காலங்களிலும், அக்.18 – நவ.16 காலத்திலும் தம் சஞ்சார நிலைகளால் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். எடுக்கும் வேலையை வெற்றியாக்குவார். அரசு வழி முயற்சியை சாதகமாக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். வேலை, தொழிலில் விருப்பத்தை நிறைவேற்றுவார். வழக்கு விவகாரத்தை முடித்து வைப்பார். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வை தருவார். 


பொதுப்பலன் 

ராகு, கேது, சனி உங்களை பயமுறுத்தினாலும், இந்த ஆண்டில் ஐந்தரை மாத காலம் அஸ்தமனம், வக்ரம் என சனியின் நிலை மாறுவதும், மே 26 – அக்.20 வரை சனிக்கு குருபார்வை உண்டாவதும் சனியின் பாதிப்பு நெருங்காமல் செய்யும். லாப குருவின் பார்வைகள், செவ்வாய் 3,6,11ல், சூரியன் 3,6,10,11 ல் சஞ்சரிக்கும் காலத்தில் லாபம் உண்டாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் என கனவு நனவாகும். அரசு வழியில் ஆதாயம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எந்தவித சங்கடங்களும் நெருங்காது. 


தொழில் 

எந்த நிலை வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி கொண்ட உங்களுக்கு, தொழிலில் எப்போதும் ஆர்வம் இருக்கும். கண்ணும் கருத்துமாக இருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வீர்கள். எதிர்பார்ப்பை அடையும் வரையில் தொடர்ந்து உழைத்து வருவீர்கள். ஜூவல்லரி, பேன்சி ஸ்டோர், அழகு சாதனப் பொருட்கள், ஜவுளி, கவரிங், வாகன விற்பனை, பியூட்டி பார்லர், சின்னத்திரை, சினிமா, யூடியூப் தொழில் முன்னேற்றம் பெறும். அதில் ஈடுபட்டுள்ளோரும், பணியாளர்களும் லாபம் காண்பர்.


பணியாளர்கள்  

வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு வேலையில் இருந்த அழுத்தம் குறையும். சிலர் புதிய வேலை, அதிக சம்பளம் தரும் பணியிடத்திற்கு மாறலாம். அவர்கள் வேலையில் குறை கூற முடியாத அளவிற்கு நடப்பது அவசியம்.


பெண்கள் 

தனிநலன், சுயவளர்ச்சியில் உறுதியாக இருப்பர். கல்வி, வேலை, திருமணம், குழந்தை, வீடு என்ற கனவு நனவாகும். சுய தொழில் செய்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு தடைபட்ட இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு விலகியவர்கள் மனம் மாறுவர். கணவரின் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.


கல்வி 

ஆசிரியரின் ஆலோசனையை ஏற்று செயல்பட்டால் தேர்வில் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்.  சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்ல வாய்ப்புண்டு. 


உடல்நிலை 

உங்களை சங்கடப்படுத்தி வந்த நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். மருத்துவமனையே கதியாக இருந்தவர்களுக்கு உடல்நிலை சீராகும். மருத்துவச்செலவு குறையும்.


குடும்பம் 

குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். எப்படி வாழப் போகிறோம் என சங்கடப்பட்டு வந்தவர்களின் நிலையும் இப்போது மாறும். பொன், பொருள் சேரும், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும்.  சுப நிகழ்ச்சி நடந்தேறும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும்.


பரிகாரம் துர்கையை வழிபட எதிரி பயம் போகும். வாழ்வில் நன்மை நடந்தேறும்.


உத்திரம்: சவாலே சமாளி


ஆத்மக்காரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1 ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.


2026 ம் ஆண்டில் உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு செயல்களில் தடை, உடல் பாதிப்பு, வியாபாரம், தொழிலில் நெருக்கடி, வேலையில் பிரச்னை, முன்னேற்றத்தில் தடை ஏற்படும். அதே சமயத்தில் எதிர்வரும் சவால்களை சமாளிக்கும் சக்தியும் உண்டாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு  எடுத்த முயற்சிகள் வெற்றியாகும். நினைத்தது நடக்கும். அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். பணவரவு அதிகரிக்கும்.


சனி சஞ்சாரம் 

உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை கண்டச் சனியாகவும் அதன்பின் அஷ்டமச் சனியாகவும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, கணவன் மனைவிக்குள் சங்கடம், உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். பெற்றோரின் உடல்நிலையில் பாதிப்பு, உங்கள் செல்வாக்கிற்கு சோதனை ஏற்படும். தொழில், வேலையில் நெருக்கடி உண்டாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆண்டின் முற்பகுதியில் எடுக்கும் வேலைகளில் வெற்றியையும், உடல் ஆரோக்யத்தையும், இழுபறியாக இருந்த வேலைகளை முடிக்கும் சக்தியையும் சனி வழங்குவார். அதன்பின் உடல்நிலையில் ஒரு நேரம் இருப்பதுபோல் மறுநேரம் இருக்க முடியாத அளவிலும், கணவன் மனைவிக்குள் பிரச்னையையும், புதிய நட்புகளால் களங்கத்தையும் ஏற்படுத்துவார்.


ராகு, கேது சஞ்சாரம் 

நவ.13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பின் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை அனைத்திலும் போராட்டம் இருக்கும். குடும்பத்தில் சங்கடம், உடல் பாதிப்பு, நட்பால் பண இழப்பு, அவமானம், தொழிலில் தடை ஏற்படும். அதன்பின் அனைத்திலும் மாற்றம் ஏற்படும். முன்னேற்றம் உண்டாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13 வரை யோக காலமாக இருக்கும். எடுத்த வேலைகள் முடியும். எதிரிகள் உங்களை நெருங்க மாட்டார்கள். வழக்கு விவகாரம் சாதகமாகும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அதன்பின் பணவரவு அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்


குரு சஞ்சாரம்

 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் வரவு அதிகரிக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம், பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். ஆண்டின் மத்தியில் அலைச்சல் செலவு  ஏற்பட்டாலும் வசதி வாய்ப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். ஆண்டின் கடைசி பகுதியில் திருமணம், குழந்தை, வீடு என்ற கனவு நனவாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆண்டின் முற்பகுதியில் தொழிலில் தடை, வேலையில் பிரச்னை ஏற்பட்டாலும் மே 26 முதல் நிலை மாறும். பணவரவு அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடந்தேறும். படிப்பு, வேலை, திருமணம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். ஆண்டின் கடைசியில் செலவு அதிகரித்தாலும் மகிழ்ச்சியான நிலை இருக்கும். 


சூரிய சஞ்சாரம் 

உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜன. 15 – பிப். 12, மே. 15 – ஜூலை. 16 காலங்களிலும், அக். 18 – நவ.16 காலத்திலும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, பிப்.13 – மார்ச்14,  மற்றும் ஜூன்15 – ஆக.17 காலங்களிலும், நவ.17 – டிச.15 காலத்திலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியனால்  வெற்றிநடை போடுவீர்கள். முயற்சி வெற்றி பெறும்.  வேலை வாய்ப்பிற்கும் சுய தொழிலுக்கும் வழி உண்டாகும். பட்டம், பதவி, அந்தஸ்து என உயர்வு காண்பீர்கள். வழக்கு விவகாரம் சாதகமாகும். பணியில் எதிர்பார்த்த இடமாற்றம்,  பதவி உயர்வு கிடைக்கும். 


பொதுப்பலன் 

குடும்பம், தொழில், வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்வில் புதிய பாதை தெரியும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். எதையும் துணிச்சலாக செய்யும் அளவிற்கு செல்வாக்கு உயரும்.   எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். 


தொழில்  

உழைப்பால் உயரும் உங்களுக்கு  தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியில் கவனமாக இருப்பீர்கள். அரசு ஒப்பந்தம், ஷேர் மார்க்கெட், எக்ஸ்போர்ட், டிராவல்ஸ், ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், பப்ளிகேஷன், விவசாயம், வாகன விற்பனை, சின்னத்திரை, சினிமா, யூடியூப் தொழில்கள் முன்னேற்றம் பெறும். 


பணியாளர்கள்  

தற்காலிகப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரமாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தின் ஆதரவு உண்டாகும்.


பெண்கள் 

மனக் கவலை தீரும்.  சுய தொழில் ஆதாயம் தரும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். கணவரின் அன்பு அதிகரிக்கும். 


கல்வி 

படிப்பில் அக்கறை கூடும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மருத்துவம், பொறியியல் படிக்கும் கனவு நனவாகும்.


உடல்நிலை 

நோயில்  இருந்து விடுபடுவீர்கள். ஆச்சரியப்படும் வகையில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்யம் சீராகும். மருத்துவச் செலவு குறையும்.


குடும்பம் 

செல்வாக்குடன் வாழும் நிலை உருவாகும். திட்டமிட்டு செயல்பட்டு வீடு, வாகனம் வாங்குவீர்கள். சிலர் தங்கம், நிலம் மீது முதலீடு செய்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.


பரிகாரம் : குலதெய்வத்திற்கு பொங்கலிட்டு வழிபட சங்கடம் தீரும். நன்மை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !