பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா
ADDED :18 hours ago
ஊத்துக்கோட்டை: பைரவர் கோவிலில் நடப்பாண்டின், முதல் தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது. ஊத்துக்கோட்டை அடுத்த தொம்பரம்பேடு கிராமத்தில் மகா கால பைரவர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும் அஷ்டமி நாட்களில் தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி விழா நடைபெறுவது வழக்கம்.
நடப்பாண்டின் முதல் தேய்பிறை அஷ்டமி விழா நேற்று நடந்தது. காலை 10:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. முன்னதாக, கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து பூஜை செய்யப்பட்டது. பின், சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.