உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் ஜனவரி 17 முதல் 19 வரை ஸ்ரீ புரந்தரதாசர் ஆராதனை மகோற்சவங்கள்

திருமலையில் ஜனவரி 17 முதல் 19 வரை ஸ்ரீ புரந்தரதாசர் ஆராதனை மகோற்சவங்கள்

திருப்பதி; கர்நாடக சங்கீதத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஸ்ரீ புரந்தரதாசரின் ஆராதனை மகோற்சவங்கள், திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் ஜனவரி 17 முதல் 19 வரை டிடிடி தாச சாகித்ய திட்டத்தின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளன.


முதல் நாளான ஜனவரி 17 அன்று, சுப்ரபாதம், தியானம், குழு பஜனைகள், நகர சங்கீர்த்தனம், புரந்தர இலக்கியக் கருத்தரங்கம், பல்வேறு மடாதிபதிகளின் ஆசிகள் மற்றும் சங்கீர்த்தன மாலை நிகழ்ச்சிகள் நடைபெறும். காலை 9:30 மணிக்கு முக்கிய மடாதிபதிகள் ஆசி வழங்குகின்றனர். இரண்டாம் நாளான ஜனவரி 18 அன்று, காலை 6 மணிக்கு அலிபிரிக்கு அருகில் உள்ள புரந்தரதாசர் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்படும். மாலை 6 மணிக்கு, ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் உற்சவ மூர்த்திகள் கோவிலில் இருந்து நாராயணகிரி தோட்டங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவார்கள். அதைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவை மற்றும் தாச சங்கீர்த்தன நிகழ்ச்சிகள் நடைபெறும். இறுதி நாளான ஜனவரி 19 அன்று, சுப்ரபாதம், தியானம், குழு பஜனைகள், நகர சங்கீர்த்தனம், சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும். 


நவரத்ன சங்கீர்த்தன நிகழ்ச்சி; ஸ்ரீ புரந்தரதாசர் ஆராதனை மகோற்சவத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீ வெங்கடேஸ்வர நவரத்ன சங்கீர்த்தன நிகழ்ச்சி ஜனவரி 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருமலையில் உள்ள பாபவிநாசம் சாலையில் உள்ள கல்யாணமஸ்து அரங்கில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில், 300 புகழ்பெற்ற கலைஞர்கள், ஸ்ரீ புரந்தரதாசரால் ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமானைப் போற்றி இயற்றப்பட்ட, நவரத்தினங்கள் போன்ற ஒன்பது பக்திப் பாடல்களைக் கூட்டாகப் பாடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !