உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நன்றி பாராட்டும் வகையில் குலவையிட்டு கோ மாதாவை வழிபட்ட விவசாயிகள்

நன்றி பாராட்டும் வகையில் குலவையிட்டு கோ மாதாவை வழிபட்ட விவசாயிகள்

திருப்பூர்: விவசாய பணிகளில் உதவும் காளை மாடுகள், ஆண்டு முழுவதும் பால் கொடுக்கும் பசு மாடுகளுக்கு நன்றி பாராட்டும் வகையில், பட்டிப்பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் வைத்து, விவசாயிகள் நேற்று கொண்டாடினர்.


தை மாத பிறப்பை, வீடுகள் தோறும் பொங்கல் வைத்து தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறோம். அதேபோல், மாடு வளர்ப்பவர்கள், இரண்டாவது நாளில், மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடுகின்றனர். மாடு வளர்ப்பவர்கள், மாட்டுத்தொழுவத்தை சுத்தம் செய்து, பட்டிப்பொங்கல் வைத்து வழிபட்டனர். மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு ‘காவி’ பூசி, விபூதி, மஞ்சள், குங்குமம் வைத்தும், புதிய கயிறுகளை மாற்றியும், மாலை அணிவித்தும் அலங்கரிக்கப்பட்டன. காளை மாடுகளுக்கு, ‘கலர்புல்’ லான பெயின்ட் மூலமாக, கொம்புகள் பூசி அலங்கரிக்கப்பட்டன. கொம்பு மற்றும் கால்களுக்கு சலங்கை கட்டப்பட்டன. விவசாயிகள், பட்டிப் பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் என, இரண்டு பொங்கல் வைத்ததனர். மாட்டுத்தொழுவம் அருகே, படையலிட்டு, மாடுகளுக்கு தீபாராதனை செய்து வழிபட்டு, சர்க்கரை பொங்கல் கரும்பு கொடுக்கப்பட்டது.


மாட்டுத்தொழுவத்தில், சிறிய குளம் அமைத்து தண்ணீரை தேக்கி வைத்து, அதற்கு முன் சர்க்கரை பொங்கல், கரும்பு, முறுக்கு ஆகியவை வைத்து வழிபட்டனர். இளைஞர்கள், சிறுவர் என, குடும்பத்தினர் இணைந்து, மாடுகளை அலங்கரித்தனர். கரும்புத்துண்டு, முறுக்கு மற்றம் வாழைப்பழம் கட்டிய சரத்தை, மாடுகளின் கொம்பில் கட்டிவிட்டு, முடக்கத்தான் கொடியில் தயாரிக்கப்பட்ட கயிற்றை தாண்டி ஓடும் வகையில், ஓசை எழுப்பி, மாடுகள் விரட்டப்பட்டன. பட்டியில் இருந்து, கொடிகளை தாண்டி குதித்து, மாடுகள் காட்டுக்குள் துள்ளிக்குதித்து ஓடின. விவசாயிகள் கூறுகையில், ‘விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் காளைமாடுகள் மற்றும் பால் கறக்கும் பசுமாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. பட்டியில் பொங்கல் வைத்து, பசுமாடுகளை கொண்டாடுவதன் மூலம், பட்டி பெருகும் என்பது நம்பிக்கை. நாடு செழிக்க வேணும்... நல்ல மழை பெய்ய வேணும். ஊரு செழிக்க வேணும், உகந்த மழை பெய்ய வேணும். கழனியில ஸ்ரீதேவி நிலையா நிற்க வேணும். பட்டி பெருக வேணும், பால் பானை பொங்க வேணும்.. பொங்கலோ பொங்கல்,’ என்று, குடும்பத்தினர் அனைவரும் குலவையிட்டு மகிழ்ச்சியுடன் வழிபட்டனர். திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள், ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில்களுக்கான கோ சாலை, பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ளது. மாட்டுப்பொங்கல் விழாவையொட்டி, கோசாலை அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாழைக்கன்று, கரும்பு, தோரணம் கட்டி, தொழுவத்தில் மாட்டுப்பொங்கல் வைக்கப்பட்டது. பிறகு, தலைவாழை இலையில் தேங்காய் பழம், பழவகைகள், சர்க்கரை பொங்கல் ஆகியவை வைத்து வழிபாடு நடந்தது. கொம்புகளுக்கு கலர் பெயின்ட் அடித்தும், கயிறுகளை மாற்றிலும், மாலை மற்றும் வஸ்திரம் அணிவித்தும் மாடுகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பட்டாச்சாரியார்கள், துாப, தீப ஆராதனை செய்தனர். பக்தர்கள், மாடு மற்றும் கன்றுகளை வலம் வந்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !