திருநெல்வேலி நெல்லையப்பர் தைப்பூச தீர்த்தவாரி தாமிரபரணிக் கரையில் வெகு விமரிசை
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி, திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரையில் நேற்று வெகு விமரிசையாக நடந்தது.
ஜன.,23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய 12 நாள் தைப்பூச திருவிழாவின் 10ஆம் நாளான நேற்று சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாள் அகத்தியர், லோபமுத்திரை, அஸ்திர தேவர், அஸ்திர தேவி, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பஞ்சவர்ண கேடயத்தில் எழுந்தருளி திருநெல்வேலி ஜங்ஷன் தைப்பூச தீர்த்தவாரி மண்டபத்திற்கு வந்தடைந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள், யாகங்கள் மற்றும் பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து, அஸ்திர தேவர், அஸ்திர தேவியுடன் தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.