உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலையில் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வந்தது லிப்ட்

மருதமலையில் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வந்தது லிப்ட்

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், புதியதாக கட்டப்பட்ட லிப்ட்டை, பக்தர்களின் பயன்பாட்டிற்காக, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.


மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்களின் வசதிக்காக, கடந்த, 2023ம் ஆண்டு, ராஜகோபுரத்தின் அருகே, 5.2 கோடி ரூபாய் மதிப்பில் லிப்ட் அமைக்கும் துவங்கப்பட்டது. இதில், தரை தளம் மற்றும் முதல் தளம் என, இரண்டு அடுக்குகளாக, 45 அடி உயரத்திற்கு, இரண்டு லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரே நேரத்தில், ஒரு லிப்டில் 20 பேர் பயணிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ளது. பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பில் இருந்த லிப்ட் பணிகள் முடிக்கப்பட்டு, திறப்பு விழாவிற்காக காத்திருந்தது. இந்நிலையில், தைப்பூச தேர்த்திருவிழாவான நேற்று, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தனது மனைவி சாந்தியுடன் வந்திருந்தார். புதியதாக கட்டப்பட்ட லிப்ட்டை பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதன்பின், லிப்ட்டில் பயணித்து, கோவிலுக்கு சென்றார். அங்கு, மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில், ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், இணை கமிஷனர் ரமேஷ், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்கார் ஜெயகுமார், துணை கமிஷனர் செந்தில்குமார் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


அந்நிகழ்ச்சியின்போது, அமைச்சர் சேகர்பாபு பேசுகையில்,"தைப்பூசத்திற்காக பல கோவில்களில் கட்டணம் ரத்து செய்யப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஜன.,31ம் தேதி, பழனி கோவிலில், 1.20 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவிலில், 13 கோடி செலவில் உருவாக்கப்பட்ட தங்கத்தேர் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அதே பகுதியில், 3 கோடி மதிப்பில், கட்டப்பட்ட மண்டபமும் திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆட்சியில் மட்டும், 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை உபயதாரர்கள் நிதியில், பணிகள்‌மேற்கொள்ளப்பட்டுள்ளது. 130 ராஜபுரங்கள் கட்டும் பணி 214 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டு, 27 ராஜ கோபுரங்கள் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மன்னீஸ்வரர் கோவிலில், தங்கத்தேர் துவக்கி வைக்கப்படுகிறது. மருதமலையில், 5.2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட லிப்ட், பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு 30 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு, நிறைமாத கர்ப்பிணிகளுக்கு இலவசம்,"என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !