காசி விஸ்வநாதர் கோவிலில் தைப்பூச தெப்ப உத்சவம்
செய்யூர்: கடப்பாக்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், 50ம் ஆண்டு தைப்பூச தெப்ப உத்சவ விழா விமரிசையாக நடந்தது. செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் கிராமத்தில், விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவில் உள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு, 50ம் ஆண்டு தைப்பூச தெப்ப திருவிழாவை நடத்த கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு விநாயகர் வழிபாடுடன், விழா துவங்கியது. காலை 10:30 மணிக்கு மஹா அபிஷேகம் நடந்தது. முக்கிய நிகழ்வான தெப்ப திருவிழா, நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் துவங்கியது.
கோவில் எதிரே உள்ள குளத்தில் தெப்பம் அமைக்கப்பட்டு, அதில் சிறப்பு அலங்காரத்தில் விசாலாட்சியுடன், காசி விஸ்வநாதர் மூன்று முறை குளத்தை வலம் வந்தார். கடப்பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.