கேரளாவில் உள்ள கோவில்களில் ஈஷா மஹா சிவராத்திரி விழா நேரலை
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி வளாகத்தில், வரும், 15ம் தேதி, சத்குரு முன்னிலையில், மஹா சிவராத்திரி விழா நடக்கிறது. இந்த விழா, உலகிலேயே அதிக மக்களால் நேரலையில் பார்க்கப்படும் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்ச்சிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. சுமார், 24 மொழிகளில், 100க்கும் மேற்பட்ட டி.வி.சேனல்கள் மற்றும் இணையதளங்கள் வழியாக, 14 கோடிக்கும் அதிகமான மக்கள் இதனை காண்பார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. மஹா சிவராத்திரி நாள் இரவில், மஹா மந்திர உச்சாடனம் மற்றும் சக்திவாய்ந்த தியானங்களை சத்குரு வழிநடத்தவுள்ளார். இதனுடன், இரவு முழுவதும் மக்களை விழிப்புணர்வுடன் வைத்துக்கொள்ள பாரத பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈஷா மஹா சிவராத்திரி விழாவில், கேரளா மாநில மக்களும் பங்கேற்கும் வகையில், கேரளா மாநிலம் முழுவதும் உள்ள 29 முக்கிய கோவில்களில், இவ்விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதில், குறிப்பாக, 12 கோவில்களில் பங்கேற்பவர்களுக்கு, ருத்ராட்சை தீட்சை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, கேரளாவில் உள்ள பக்தர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களுக்கு அருகிலுள்ள கோவில்களில் கூடி, நேரலை மூலம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, ஈஷா தன்னார்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.