வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ரூ.33 லட்சம் உண்டியல் காணிக்கை
ஸ்ரீபெரும்பதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல் திறந்து நேற்று எண்ணப்பட்டது. இதில், 32.92 லட்சம் ரூபாய், 81 கிராம் தங்கம், 1,400 கிராம் வெள்ளி உள்ளிட்டவை காணிக்கையாக கிடைத்தது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி, கடந்த நவ., மாதம் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. இதையடுத்து, காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், கோவிலில் உள்ள 10 உண்டியல்கள் திறந்து நேற்று காணிக்கை எண்ணப்பட்டன.
இதில், 32 லட்சத்து, 92,491 ரூபாய், 81 கிராம் தங்கம், 1,400 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது.
இதில், கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில் தேவ்ராஜ், ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் கோவில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.