செஞ்சி அருகே கோவிலுக்கு நிலதானம் செய்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
செஞ்சி: செஞ்சி அருகே கோவிலுக்கு நிலம் தானம் செய்த கல்வெட்டை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
செஞ்சி, கிருஷ்ணகிரி கோட்டைக்கு மேற்கே உள்ள தேவரடியார் ஏரி, விவசாய நிலங்களில் வரலாற்று ஆய்வாளர்கள் அன்னமங்கலம் முனுசாமி, விழுப்புரம் செங்குட்டுவன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அங்கிருந்த 3 பாறைகளில் கல்வெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். 3 புதிய கல்வெட்டுகளில் ஒன்று மட்டுமே தெளிவாகவும், மற்றவை சிதைந்தும் உள்ளன.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தெளிவாக இருந்த கல்வெட்டில் ‘மங்கலபுரம் ஊரவர் புழுதிச்சி நாயக்கரவ ர்கள் நாளிலே குனைய பட்டரயர் புண்ணியமாக செல்லப் பிள்ளையாற்கு மேற்கு தலைல் குருய’ என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இது செஞ்சி பகுதியை புழுதிச்சி நாயக்கர் என்பவர் நிர்வாகம் செய்தபோது மங்கலம் ஊரைச் சேர்ந்தவர்கள் வழிபட்டு வந்த பிள்ளையாருக்கு நிலதானம் செய்திருப்பதை பதிவு செய்துள்ளனர். இதன் காலம் கி.பி.16–17ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். இந்த கல்வெட்டு உள்ள பகுதிக்கு அருகே கொத் தமங்கலம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையே 400 ஆண்டுகளுக்கு முன் மங்கலபுரம் என்று கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு ஆய்வாளர்கள் கூறினர்.