உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா துவங்கிய நிலையில், நேற்று இரவு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. இன்று காலை 10:30 மணிக்கு தங்க கொடிமரத்தில் சிங்க கொடி ஏற்றப்பட்டது. இரவு 7:00 மணிக்கு பூதகி வாகனத்தில் கோலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் மற்றும் பள்ளி மாணவர்களின் அலங்கார ஊர்திகளுடன் கோலாகலமாக வீதி உலா நடந்தது. தினமும் அம்மன் சிம்ம, அன்ன, ரிஷப, யானை, கிளி, காமதேனு வாகனங்களில் உலா வர உள்ளார். மார்ச் 27 காலை காளி அலங்காரத்துடன் சின்ன கடை வீதியில் சேர்க்கை ஆகிறார். மாலை 5:00 மணிக்கு இரட்டை மாடுகள் பூட்டப்பட்ட வண்டியில் வண்டி மாகாளி வேஷ விழா நடக்கிறது. மார்ச் 31 இரவு குதிரை வாகனத்திலும், ஏப்., 1 காலை தொடங்கி மாலை வரை பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இரவு 8:00 மணிக்கு அம்மன் சர்வ அலங்காரத்துடன் மின் தீப தேரில் அமர்ந்து நான்கு மாட வீதிகளை சுற்றி வருவார். மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு அம்மன் கள்ளர் திருக்கோலத்துடன் வைகையில் எழுந்தருளுகிறார். அன்று தீர்த்தவாரி, இரவு கொடி இறக்கப்படும். ஏப்.,3 அதிகாலை 4:00 மணி தொடங்கி 10:00 மணி வரை வைகையில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுக்க உள்ளனர். 11:00 மணிக்கு பாலாபிஷேகம் நடக்கிறது. 10 நாட்களும் கலைநிகழ்ச்சிகள் நடக்கும். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள், ஆயிர வைசிய சபையினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !