பரிமளரங்கநாதர் கோயில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
மயிலாடுதுறை; திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
மயிலாடுதுறை அருகே திருஇந்தளூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் பஞ்ச அரங்க சேத்திரங்களுள் ஒன்றானதுமான பரிமள ரங்கநாதர் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு பங்குனி உத்திர பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனையொட்டி சுகந்தவன நாதப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். பட்டாச்சாரியார்கள் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து காலை 8.30 மணியளவில் கருட கொடியேற்றினர். தொடர்ந்து பெருமாள் கோயில் உட்பிரகாரம் வலம் வந்து ஏகாதசி மண்டபத்தில் உள்ள கண்ணாடி அறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் மாலை பெருமாள் திருவீதியுலா நடைபெறுகிறது. முக்கிய விழாவாக வரும் 27ம் தேதி ஓலை சப்பரமும், 30ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், ஏப்ரல் 1ம் தேதி திருத்தேரோட்டம், சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி உற்சவமும், ஏப்ரல் 12ம் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் ரம்யா தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.