உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிலைத்தன்மை சான்றிதழ் அளிக்காததால் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் ரத்து

நிலைத்தன்மை சான்றிதழ் அளிக்காததால் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் ரத்து

தொண்டாமுத்தூர்: கோவையின் பழமையான கோவிலாகவும், முக்கிய ஆன்மிக ஸ்தலமாகவும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு, நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன், பங்குனி உத்திர தேர்த்திருவிழா துவங்கியது. வரும், 29ம் தேதி, இத்திருவிழாவின் முக்கிய‌ நிகழ்வான தேர் வடம் பிடித்தல் நடக்க இருந்தது. இந்நிலையில், சோமாஸ்கந்தர், பச்சை நாயகி அம்மன், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, நடராஜர் ஆகியோர் எழுந்தருளும், 5 தேர்களின் நிலைத்தன்மை குறித்து, பொதுப்பணித்துறை (கட்டடம் மற்றும் பராமரிப்பு) உதவி செயற்பொறியாளர் மோகனசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். அதன்பின், சோமாஸ்கந்தர் மற்றும் பச்சை நாயகி அம்மன் தேர்கள், உறுதியாக இல்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தார். இதனால், தேர் வடம் பிடித்தல் நடக்குமா என்று சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக, கலெக்டர் பவன்குமார் தலைமையில், நேற்று மாலை, கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், சோமாஸ்கந்தர் மற்றும் பச்சைநாயகி அம்மன் தேர்கள் பலவீனமாக உள்ளதால், பொதுப்பணித்துறையினர் நிலைத்தன்மை சான்றளிக்கவில்லை. இதனால், தேரோட்டம் நடத்த முடியாது. அதற்கு பதிலாக, சுவாமிகளை, தங்கம் மற்றும் வெள்ளி சப்பரத்தில் வைத்து திருவீதியுலா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தற்போது உள்ள சோமாஸ்கந்தர் தேர், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இதனால் புதிய தேர் உருவாக்க, இரண்டு மாதங்களுக்கு முன்பு பூஜை நடத்தப்பட்டது. அறநிலையத்துறையின் அலட்சியத்தால், இந்தாண்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !