திருவள்ளூர் ஹிந்து அறநிலைய துறை கோவில்களில் சம்பளம் இல்லாமல் ஊழியர்கள் தவிப்பு
கடம்பத்துார்: திருவள்ளூர் வட்டத்தில் ஹிந்து சமய அறநிலைய துறையின் கீழ் உள்ள 40 கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததால் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் வட்டத்தில் உள்ள கூவம், மப்பேடு, நரசிங்கபுரம், பேரம்பாக்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில், ஹிந்து சமய அற நிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 40 கோவில்களில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் என, 75 பேர் பணி புரிந்து வருகின்றனர். இக்கோவில்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு, கடந்த பிப்ரவரி மாதத்திற்கான சம்பளம் தற்போது வரை வழங்கப்படவில்லை. மேலும், மின்கட்டணமும் செலுத்தப்படவில்லை. இந்நிலையில், பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம், மின்கட்டணம் செலுத்தாததால், மின்வாரிய அதிகாரிகள் இணைப்பை துண்டிக்க வந்தனர். இதையடுத்து, கோவில் நிர்வாக ஊழியர்கள், மின்வாரிய அதிகாரிகளிடம் சமரச பேச்சு நடத்தியதை அடுத்து, அதிகாரிகள் திரும்பி சென்றனர். இது, சோளீஸ்வரர் கோவிலில் நடந்து வரும் பிரம்மோத்சவ திருவிழாவிற்கு வந்த பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கி, மின் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கூறியதாவது: திருவள்ளூர் வட்டத்தில் உள்ள 40 கோவில்களில் பணிபுரிந்து வந்த செயல் அலுவலர் லதா பணியிடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை பார்த்தசாரதி கோவிலுக்கு கண்காணிப்பாளராக சென்று விட்டார். தற்போது , புதிதாக நியமிக்கப்பட்ட சிந்துமதிக்கு, வங்கி பரிவர்த்தனை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் புதிய செயல் அலுவலர் மூலம் சம்பளம் மற்றும் மின்கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.