உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் நாளை 2,000 லிட்டர் பாலாபிஷேகம்

பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் நாளை 2,000 லிட்டர் பாலாபிஷேகம்

சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 லிட்டர் பாலாபிஷேகம் நடக்க உள்ளது.


விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி – திண்டிவனம் நெடுஞ்சாலையில், மத்திய திருப்பதி என அழைக்கப்படும், பஞ்சவடீ திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு, வலம்புரி ஸ்ரீ மஹா கணபதி, பட்டாபிஷேக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி ஸ்ரீவேங்கடாஜலபதி மற்றும் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்கள் அமைந்துள்ளன. இந்நிலையில், நாளை ராமநவமி உத்சவத்தையொட்டி, பஞ்சவடீ திருத்தலத்தில், பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், நாளை ஒவ்வொரு காலத்திலும், புண்யாஹவாசனம், பஞ்சஸுக்த ஹோமம், மூலமந்த்ர ஹோமம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை நடக்கும். நாளை காலை, லட்சார்ச்சனை பூர்த்தியாகும். ராம நவமியை முன்னிட்டு, நாளை அதிகாலை 4:00 மணிக்கு, ராமர் சன்னிதியில், விஸ்வ ரூப தரிசனம், கோ பூஜை நடக்கும். அதன்பின், காலை 5:30 மணிக்கு, விசேஷ திருமஞ்சனம் நடக்கும். காலை 6:00 மணிக்கு மேல், யாக சாலையில் ஏழாம் கால பூஜை நடக்கும். காலை 8:30 மணிக்கு, சீதா சமேத ஸ்ரீராமச்சந்த்ர மூர்த்தி மற்றும் 36 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு, 2,000 லிட்டர் பாலாபிஷேகம், வாசனை திரவியங்களால் விசேஷ திருமஞ்சனம் நடக்கும். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படும். காலை 10:00 மணிக்கு, தாமல் ராமகிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு மேல், ஸ்ரீராமர் சீதா பிராட்டியுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். புதுச்சேரி குமார் குழுவினரின், விசேஷ நாதஸ்வர இசையுடன், சிறப்பு சீதா கல்யாணம் நடக்கும். விழா ஏற்பாடு விபரங்களை, பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், தலைவர் யுவராஜன் ஆகியோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !