உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் தொடரும் இழுபறி

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் தொடரும் இழுபறி

தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு நிலைத்தன்று சான்று கிடைப்பதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது.


கோவையின் மிகப்பழமையான கோவிலான பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், இந்தாண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கடந்த, 23ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், 29ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், தேர் உறுதித்தன்மையுடன் இருப்பது குறித்து, பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்தனர். ஆனால், 5 தேர்களில், முக்கிய தேரும், பழமையான தேருமான, சோமாஸ்கந்தர் தேர், உறுதியாக இல்லை. அதேபோல, அம்பாள் தேரும் உறுதியாக இல்லை எனக்கூறி, பொதுப்பணித்துறையினர் நிலைத்தன்மை சான்று அளிக்கவில்லை. இதுதொடர்பாக, கலெக்டர் பவன்குமார் தலைமையில் நடந்த கூட்டத்திலும், தேரோட்டம் நடத்த முடியாது. அதற்கு பதிலாக, சப்பரத்தில் சுவாமி திருவீதியுலா நடத்த முடிவு செய்தனர். இதுகுறித்து தகவல்கள் பரவியதும், நேற்று காலை, ஹிந்து அமைப்பினர்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனுயடுத்து, தெற்கு ஆர்.டி.ஓ., மாருதிபிரியா தலைமையில், அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ், பேரூர் டி.எஸ்.பி., சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர், ஹிந்து அமைப்புக்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில், தேர்கள் உறுதித்தன்மையாக உள்ளது. தேரோட்டம் நடக்க வேண்டும் என, ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தினர். இதனையடுத்து, மாலையில், ஸ்தபதி மற்றும் பொதுப்பணித்துறையினர் இணைந்து ஆய்வு செய்தபின் இறுதி முடிவு எடுக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, மாலையில், பொதுப்பணித்துறை (கட்டடம் மற்றும் பராமரிப்பு) உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஸ்தபதி ரவி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, இரு தேர்களில் உள்ள குறைகள் குறித்து பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். ஆனால், ஸ்தபதி ரவி, இரு தேர்களும் நல்ல நிலையில் உள்ளது என, கருத்து தெரிவித்தார். இருவேறு கருத்துகள் வந்ததால், குழப்பம் ஏற்பட்டது. அதன்பின், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர், சோமாஸ்கந்தர் தேர் உறுதியில்லை. அம்பாள் தேரில் உள்ள சில குறைகளை நிவர்த்தி செய்தால், நாளை (இன்று) மீண்டும் ஆய்வு செய்து, இறுதி முடிவு தெரிவிப்பதாக கூறி சென்றனர். இதனையடுத்து, அறநிலையத்துறையினர், நேற்று இரவு முதல், 5 ஸ்தபதிகளை கொண்டு பணிகளை துவங்கி, காலைக்குள் முடிக்க உள்ளதாக, தெரிவித்தனர். இதனால், தேரோட்டம் விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது. இருப்பினும், இன்று பதிலுக்குப்பின், இறுதி முடிவு கிடைக்கும் என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


காலை முதல் இந்து மக்கள் கட்சி மற்றும் சில ஹிந்து அமைப்பினர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை, அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது, ஹிந்து முன்னணியினர் திடீரென, தேர் நிலை முன்பு தேரோட்டம் நடத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், அறநிலையத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, நாளை இறுதி முடிவு அறிவிப்பதாக கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !