உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் காளி அலங்காரத்தில் முத்தாலம்மன் உலா

பரமக்குடியில் காளி அலங்காரத்தில் முத்தாலம்மன் உலா

பரமக்குடி; பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில் அம்மன் காளி அலங்காரத்தில் அருள்பாலித்த நிலையில், மாட்டு வண்டியில் மாகாளி உற்ஸவம் நடந்தது. பரமக்குடி வன்னிய குல சத்திரிய மண்டகப்படி சார்பில், காலை 11:00 மணிக்கு அம்மன் 8 கரங்களுடன் காளி அலங்காரத்தில் புறப்பட்டார். அப்போது ஏராளமான சிறுவர், சிறுமியர்கள் கடவுள்களின் வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 5:30 மணிக்கு இரட்டை மாடுகள் பூட்டிய வண்டியின் மேல் தளத்தில் மாகாளி வேடமிட்டவர் வில் ஏந்தியபடி அமர்ந்தார். அப்போது அவருக்கு கீழ் வண்டியைச் சுற்றி பெண் வேடமிட்ட ஆண்கள் நடனமாடி சென்றனர். தொடர்ந்து முத்தாலம்மன் கோயிலை சுற்றி சின்ன கடையை வீதியை அடைந்தது. அங்கு இரவு 8:00 மணிக்கு மேல் மாகாளி வேடமணிந்தவர் சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானவர்கள் குறவன், குறத்தி, திருடன், போலீஸ், புலி வேடமிட்டு ஆடி சென்றனர். நகரின் முக்கிய வீதிகளில் சென்ற மாட்டு வண்டி உற்ஸவத்தை பல ஆயிரம் பக்தர்கள் தரிசித்தனர். பின்னர் இரவு 11:00 மணிக்கு அம்மன் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோயிலை அடைந்தார். சங்க நிர்வாகிகள், டிரஸ்டிகள், சபையினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !