கரி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றம்
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயிலில், 21ம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றம் நடந்தது.
விழாவையொட்டி இன்று காலை கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தது. கோயிலை சுற்றி கொடியுடன் பக்தர்கள் வலம் வந்தனர். தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி இன்று நரசிம்ம அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுகிறார். தொடர்ந்து, 29ம் தேதி முத்தங்கி அலங்காரம், முத்து பந்தல் நிகழ்ச்சியும், 30ம் தேதி ஸ்ரீராம அலங்காரம், அனுமந்த வாகனத்திலும், 31ம் தேதி வைரமுடி சேவை, கருட வாகன அலங்காரத்திலும், ஏப்., 1ம் தேதி திருக்கல்யாண உற்சவம், யானை வாகனம், 2ம் தேதி மாலை திருத்தேர் நிகழ்ச்சி, 3ம் தேதி குதிரை வாகனம், பரிவேட்டை, 4ம் தேதி சேஷ வாகனம், தெப்பத்தேர் நடக்கிறது. 5ம் தேதி பல்லக்கு சேவை, சந்தன சேவை, தீர்த்த வாரி சாற்றுமுறை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவையொட்டி, 10 நாட்களும் கோயில் வளாகத்தில் திவ்ய பிரபந்த சேவா காலம் மதியம், 2:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கிறது.