வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா துவங்கியது
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
தென் கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, மஹா சிவராத்திரி, பங்குனி உத்திர தேர்த்திருவிழா ஆகிய திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை, இறை ஆணை பெறுதல், புற்று மண் எடுத்தல், முளைப்பாலிகை, வாஸ்து சாந்தி நடந்தது. நேற்று அதிகாலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு, 16 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டு, காலை, 9:45 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, கொடிமரத்தில் நந்தி உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. மாலை, 4:30 மணிக்கு, வேள்வி பூஜை, அபிஷேகம் திருவீதி உலா நடந்தது. தேர் திருவிழாவின் ஐந்து நாட்களும், காலையும், மாலையும், வேள்வி பூஜை மற்றும் திருவீதியுலா நடக்கிறது. ஐந்தாம் நாளான வரும், 31ம் தேதி, மாலை, 5:00 மணிக்கு, திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.