பச்சை சாய்பாபா கோவிலில் சீதா கல்யாணம் விமரிசை
ஊரப்பாக்கம் : ராம நவமியை முன்னிட்டு, ஊரப்பாக்கத்தில் உள்ள பச்சை சாய்பாபா கோவிலில், சீதா கல்யாணம் நிகழ்ச்சி, காலை வெகு விமரிசையாக நடந்தது. காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம், வர்தமான் நகரில், பச்சை சாய்பாபா தரிசன மையம் உள்ளது. கடந்த 2016ல், பூமி பூஜையுடன் துவங்கப்பட்ட கோவில் கட்டுமான பணிகள் 2020ல் முடிக்கப்பட்டு, கடந்த 2021ல், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆண்டு தோறும், ராம நவமியை முன்னிட்டு, சீதா கல்யாணம் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. அதன்படி, 5ம் ஆண்டாக, சீதா கல்யாண நிகழ்ச்சி, நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, பஜனை நிகழ்ச்சி, தோடய மங்களத்துடன் குரு கீர்த்தனை, அஷ்டபதி, கோலாட்டம், கும்மி என பக்தர்கள் பரவச நிகழ்ச்சிகளுடன், சீதா கல்யாணம் நடந்தது. ஆதம்பாக்கம், பிரேமிக வரதன் சத்சங்கத்தை சேர்ந்த காயத்திரி குழுவினர், நிகழ்ச்சியை நடத்தினர். இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* ராமநவமி திருநாளை முன்னிட்டு, கடமலைப்புத்தூர், வரதராஜ பெருமாள் கோவிலில், சீதா - ராமர் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடந்தது. மதுராந்தகம் தாலுகா, கடமலைப்புத்தூர் கிராமத்தில், ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ராம நவமி திருநாளை முன்னிட்டு கர்ப உற்சவ பெருவிழாவும், அதையடுத்து, திருக்கல்யாண வைபவமும் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 18ம் ஆண்டு திருக்கல்யாண வைபவத்திற்கான, கர்ப உற்சவ விழா கடந்த 18ம் தேதி, காலை 9:00 மணிக்கு தொடங்கி, 25ம் தேதி நிறைவடைந்தது. நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு, மங்கள இசையுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. பின், காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. மாலை 4:00 மணிக்கு, ஸ்ரீமான் ஏழுமலை ராமானுஜ தாசர் தலைமையில், ஸ்ரீராமர் - சீதா கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டு, இரவு 7:00 மணிக்கு, தீப அலங்கார சேவைக்கு பின், சீதா - ராமர் பட்டாபிஷேக அலங்காரத்துடன், திருவீதி உலா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். * பொலம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேய கோவிலில் ராமநவமி விழா நேற்று விமரிசையாக நடந்தது. பொலம்பாக்கம் கிராமத்தில் மதுராந்தகம்-வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் ஜெயவீர ஆஞ்சநேய கோவில் உள்ளது. ஆண்டு தோறும் ராமநவமி விழா விமரிசையாக நடப்பது வழக்கம், இந்த ஆண்டு 26வது ராமநவமி விழாவை விமரிசையாக நடத்த கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். நேற்று காலை 8:00 மணிக்கு கலச பூஜைகள் துவங்கின. 9:00 மணிக்கு கணபதி ஹோமம், 10:00 மணிக்கு அனுமன் ஆகர்ஷன ஹோமம் செய்யப்பட்டன. பின் யாகம் வளர்க்கப்பட்டு புனிதநீரால், ஜெயவீர ஆஞ்சநேயருக்கு 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டது. பகல் 2:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஜெயவீர ஆஞ்சநேயருக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் பொலம்பாக்கம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.