உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குல்லுார் சிவன் கோவிலில் தமிழ் கல்வெட்டு கண்டெடுப்பு

குல்லுார் சிவன் கோவிலில் தமிழ் கல்வெட்டு கண்டெடுப்பு

ஆந்திர மாநிலம், குல்லுாரில் உள்ள சிவன் கோவில் பராமரிப்பு பணியின்போது, தமிழ் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது.


ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்டம், கலுவோயா மண்டலத்தில் உள்ளது குல்லுார். இங்குள்ள, 10 – 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மல்லிநாத தேவர் எனும் சிவன் கோவிலில், சமீபத்தில் புனரமைப்பு பணிகள் நடந்தன. இந்த கோவில், சோழர் காலத்தில் கட்டப்பட்டு, பாண்டியர் காலம் வரை தமிழர்களின் பராமரிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கோவில் பராமரிப்பு பணியின்போது, ஒரு பலகை கல்வெட்டில் எழுத்துகள் இருப்பதை அறிந்து, அதை தனியாக எடுத்து வைத்தனர். அதன் புகைப்படத்தை, அவ்வூரைச் சேர்ந்த நலகண்ட்லா நரேந்திர பாபு என்பவர், மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவிற்கு அனுப்பினார்.


இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு பிரிவு இயக்குநர் முனிரத்தினம் கூறியதாவது: இந்த கல்வெட்டு, 1266ல் எழுதப்பட்டுள்ளது. அப்போது இருந்த மன்னரின் பெயர் தெளிவாக இல்லை. அப்போது, இந்த ஊர் குருவாயலுார் என்ற பெயரில் இருந்துள்ளதை, கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது. இந்த கோவிலில் நிரந்தரமாக இரட்டை அந்தி விளக்குகள் ஏற்றவும், சிவபெருமானின் பூஜைக்கான உணவு படையல் இடவும், குருவாயலுார் துறைமுகத்தில் உள்ள சில மாதைகள், வரியில்லாமல் தானமாக வழங்கப்பட்ட செய்தி குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.   – நமது நிருபர் –


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !