பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் புனரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
வாலாஜாபாத்: உள்ளாவூரில் பழுதடைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, அப்பகுதி பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். உள்ளாவூர் கிராமத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒருகால பூஜை நடைபெறுகிறது. விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்குதல் நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், இக்கோவில் பராமரிப்பின்மை காரணமாக மிகவும் பழுதடைந்துள்ளது.
கோவில் மண்டபத்தின் ஒரு பகுதி, பல ஆண்டுகளுக்கு முன் இடிந்த நிலையிலும் தற்போது கோவில் கோபுரம் மற்றும் கட்டடமும் பழுதடைந்து பலவீனமாகியும் வருகிறது. கோவிலின் கோபுர பகுதியை சுற்றி உள்ள சுவாமி சிலைகள் சிதிலம் அடைந்து, கான்கிரீட் பெயர்ந்து உதிர்ந்து உள்ளன. மண்டபத்திற்குள் மழைநீர் சொட்டுவதோடு, விமான கோபுரமும் மிகவும் சிதிலமடைந்து கான்கிரீட் பெயர்ந்துள்ளது. எனவே, பழுதடைந்துள்ள இக்கோவிலை புனரமைப்பு பணி மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.