நெம்மாரா திருவிழாவில் யானை மிரண்டு ஓட்டம்: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
பாலக்காடு: நெம்மாரா திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று காலை நடைபெற்ற அணிவகுப்பின் போது யானை மிரண்டதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற நெம்மாரா நெல்லிகுளங்கரை பகவதி அம்மன் கோவில். இங்கு எல்லா ஆண்டும் பங்குனி மாதம் வேலா என்ற பெயரில் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா நேற்று செண்டை மேளம் முழங்க யானைகள் அணிவகுத்து நின்று குடை மாற்றம், பிரமாண்ட வான வேடிக்கை என வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. இந்த நிலையில் திருவிழாவில் நிறைவு நாளான இன்று காலை 8 மணியளவில் செண்டை மேளம் முழங்க யானைகள் அணிவகுப்புடன் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வு நடந்தது. அப்போது இந்நிகழ்வின் இடையே வைலாசேரி அர்ஜுனன் என்ற யானை திடீரென மிரண்டு ஓடியது. யானை மிரண்டு ஓடியதைக் கண்ட பக்தர்கள் அச்சத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். கூட்ட நெரிசலில் சிக்கியும், கீழே விழுந்தும் பலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, யானை பாகன்கள் மற்றும் யானை அடக்கும் குழுவினர் (Elephant Squad) இணைந்து யானையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பாதுகாப்புக் கருதி அந்த யானையை ஊர்வலத்தில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டது. அதன் பிறகு, மற்ற மூன்று யானைகளைக் கொண்டு சடங்குகள் மற்றும் ஊர்வலம் நடத்தி முடிக்கப்பட்டது. அதேபோல் நேற்று கோவில் வளாகத்திற்குள் யானைகள் நின்றிருந்த போது, பட்டாசு வெடித்த சத்தத்தில் நாணு எழுத்தச்சன் சங்கரநாராயணன் என்ற மற்றொரு யானையும் மிரண்டு ஓட முயற்சி செய்தது. ஆனால், பாகன்கள் துரிதமாகச் செயல்பட்டு அந்த யானையை அங்கேயே கட்டிப்போட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.