பழங்கால யாத்ரீகர் கல்மண்டபம் பராமரிக்க வலியுறுத்தல்
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் பழங்கால அடையாள யாத்ரீகர் மண்டபத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மாமல்லபுரம் பூஞ்சேரி, புதுச்சேரி சாலை பகுதியில், பழங்கால யாத்ரீகர் மண்டபம் உள்ளது. அதன் அருகில், பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படும் சிறிய விநாயகர் கோவிலும் உள்ளது. அதே பகுதி பக்தர்கள் பொறுப்பில், விநாயகர் வழிபாட்டில் உள்ளது. யாத்ரீகர் மண்டபம் நீண்டகாலமாக பராமரிப்பின்றி உள்ளது. தற்போது, மாமல்லபுரம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலைக்காக, மண்டபம் மற்றும் கோவிலின் ஆகியவற்றுக்கும் மேலாக, புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் அமைப்பதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மண்டபம் மற்றும் கோவில் ஆகியவற்றை அகற்றவே முடிவெடுத்தது. பழங்கால அடையாளமாக விளங்கும் அவற்றின் பழமை கருதி, அகற்ற தவிர்ப்பது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, அவற்றுக்கு மேலே அமையும் வகையில், பாலம் கட்டப்பட்டது. தொல்லியல் உள்ளிட்ட அரசுத் துறைகள் கட்டுப்பாட்டில், அவை இல்லாததால், பராமரிப்பு இன்றி சீரழிகின்றன. சாலைப் பணிகள் முற்றிலும் முடிந்தபின், அரசுத்துறை கட்டுப்பாட்டில், அவற்றை கொண்டு வந்து, முறையாக பராமரித்து பாதுகாக்க, வரலாற்று ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.