திருவொற்றியூர் வட்டப்பாறையம்மன் உத்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
திருவொற்றியூர்: வட்டப்பாறையம்மன் ஏழு நாள் உத்சவம் கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக துவங்கியது.
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில், வடக்கு முகம் நோக்கி, வட்டப்பாறையம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி உள்ளார். இந்த கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவ ஏழு நாள் விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, சன்னதி மைய மண்டபத்தில், கலசம் நிர்மாணிக்கப்பட்டு யாகம் வளக்கப்பட்டது. மஹா பூர்ணாஹூதி நிறைவுற்று கலசம் புறப்பாடாகின. கொடிமரம் அருகே, வெள்ளை சம்பங்கி மலர் மாலை அலங்காரத்தில், அம்மன் எழுந்தருளினார். கொடிமரத்திற்கு, பால், பன்னீர், இளநீர், மஞ்சள் நீர் மற்றும் நிறைவாக கலசநீரால் அபிஷேகம் நடந்தது. பின், மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டு, மேள தாளங்கள், வேதமந்திரங்கள் முழங்க, கொடியேற்றப்பட்டது. அப்போது, கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், ‘ஓம் சக்தி, பராசக்தி’ என, முழங்கினர். தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட பவளக்கால் விமானத்தில் எழுந்தருளிய நிலையில், வட்டப்பாறையம்மன் மாடவீதி உற்சவம் நடந்தது. இதில், கோவில் உதவி கமிஷனர் நற்சோணை உட்பட பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில், உற்வச தாயார், சாமந்தி பூ மலர் மாலை அணிந்து, ராஜாங்க விமானத்திலும், விருஷி பூ மாலை அணிந்து புஷ்ப விமானத்திலும், தவனம் மாலை அணிந்து, அஸ்தமானகிரி விமானத்திலும், செவ்வரளி பூ மாலை அணிந்து, சவுடால் விமானத்திலும், அரளி பூ மாலையில், புஷ்ப பல்லக்கிலும், கதம்பம் பூ மாலை அணிந்து, இந்திர விமானத்தில் எழுந்தருளி மாடவீதி உற்சவம் நடக்கும்.