உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது.பூலோக வைகுண்டம் என போற்றப்படும் இக்கோவிலில் சொர்க்க வாசல் தனியாக கிடையாது என்பது தனிச்சிறப்பாகும். இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் 3-வது தலமாக போற்றப்படுகிறது. மேலும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்ய பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா, சித்திரை பெருவிழா ஆகியவை வெகு விமரிசை யாக நடைபெறுவது வழக்கம்.  அதுபோல இவ்வாண்டும் சித்திரை பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பெருமாள் தாயாருடன் கொடிமரம் அருகே சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் காலை- மாலை நேரங்களில் பெருமாள், தாயார் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது. வரும், 25ம் தேதி ஓலை சப்பரத்தில் சாரங்கபாணி மற்றும் தாயார் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை பெருவிழா தேரோட்டம் வருகிற 30ம் தேதி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !