இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரர் கோவிலில் சித்திரை தேரோட்டம்
இலஞ்சி: இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரர் கோவிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரர் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் காலை மாலை வேளையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் தொடர்ந்து தினமும் இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்து வருகிறது. விழாவில் 27ம் தேதி மாலையில் நடராஜருக்கு தாண்டவ தீபாரதனை நடந்தது. இரவு நடராஜருக்கு வெள்ளை சாத்தி அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று நடராஜருக்கு பச்சை சாத்தி தீபாராதனை நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.. முதலாவதாக பெரிய தேரில் முருகர் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுக்க தேர் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாள் தேர்தலில் வலம் வந்தனர். 30ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் தீர்த்தவாரி நடக்கிறது. இரவில் சுவாமி திருவீதி உலா மற்றும் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல் நடக்கிறது.