பரமக்குடி வைகையில் இறங்கிய கள்ளழகர் திருக்கோயில் திரும்பினார்
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் இன்று மீண்டும் திருக்கோயில் திரும்பினார்.
பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்., 26 காப்பு கட்டுடன் துவங்கி நடந்தது. தினமும் யாகசாலை பூஜைகள் நடந்து மே 1 அதிகாலை கள்ளழகர் கருப்பணசாமியிடம் விடை பெற்று வைகை ஆற்றில் வெண் பட்டு உடுத்தி இறங்கினார். அன்று காலை 9:00 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகரை பல்லாயிரம் பக்தர்கள் மஞ்சள் நீர் பீய்ச்சி வரவேற்றனர். மறுநாள் வண்டியூரில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு வைகையில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் மற்றும் விடிய விடிய தசாவதார நிகழ்வு நடந்தது. கடந்த கருட வாகனத்திலும், முத்து பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்திலும் அருள் பாலித்தார். இன்று காலை 8:45 மணிக்கு கள்ளழகர் மீண்டும் கோடாரி கொண்டை இட்டு தங்க நெல்மணி தோரணங்கள் சூடி, தடி, வாள், வளரி, கத்தி, கேடயம் ஏந்தி பூ பல்லக்கில் நகர் வலம் வந்தார். அப்போது வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்து கோவிந்தா கோஷம் முழங்க ஆரவாரத்துடன் வரவேற்றனர். தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு மேல் கோயில் முன்பு ஆடி அசைந்து சென்ற பெருமாளை பூக்கள் தூவி கண்குளிர தரிசித்தனர். மேலும் கருப்பணசாமியிடம் விடை பெற்று சென்ற அழகர் மீண்டும் அவரின் அனுமதியோடு மகா தீபாராதனைக்கு பின் இரவு திருக்கோயிலுக்குள் சேர்க்கையாகினார். பின்னர் 9:00 மணிக்கு அழகர் கண்ணாடி சேவையில் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்தனர்.