முத்தாலம்மன் கோயில் விழா: மாமன் மைத்துனர்கள் துடப்பத்தால் அடிக்கும் வினோத நிகழ்ச்சி
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மறவபட்டி முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழாவில் மாமன் மைத்துனர் உறவுமுறை கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் துடப்பத்தால் அடித்துக் கொள்ளும் வினோத நிகழ்ச்சி நடந்தது. இக்கோயில் பொங்கல் விழா நேற்று துவங்கியது. 3 நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் முதல் நாளில் பக்கத்து ஊரான கன்னியப்பபிள்ளைபட்டியில் முத்தாலம்மன் சிலை செய்து அதனை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக கொண்டு வந்து கோயிலில் வைத்தனர். முத்தாலம்மனுக்கு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடந்தது. பக்தர்கள் பொங்கலிட்டு, கிடா வெட்டி, தீச்சட்டி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவில் 2 ம் நாளில் முக்கிய நிகழ்வாக மாமன் மைத்துனர் உறவுமுறை கொண்டவர்கள் கோயில் முன்பு ஒன்று கூடினர். உடல் முழுவதும் சேற்றை பூசிக்கொண்டு ஒருவரை ஒருவர் கயிறுகளால் கைகளில் கட்டிக் கொண்டு தனித்தனி குழுக்களாக கோயில் முன்பு கூடினர். மாமன் மைத்துனர் உறவு முறை கொண்டவர்கள் தங்கள் உறவு நீடிக்கவும், கிராமத்தில் மழை வளம் பெருகி விவசாயம், தொழில் வளம் சிறக்கவும் வேண்டிக்கொண்டு துடப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் வினோத நிகழ்ச்சி நடந்தது. பெண்கள் முளைப்பாரியுடன் அம்மன் சிலை பூஞ்சோலை அடையும் நிகழ்ச்சி நடந்தது. பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள் நடந்தது.