திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் தேரோட்டம் விமரிசை
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவில், முக்கிய விழாவான தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ‘கோவிந்தா’ கோஷத்துடன், பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இங்கு, ஆண்டு தோறும் சித்திரை மாதம், 10 நாள் பிரம்மோற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம், 1ம் தேதி, கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. 3ம் தேதி கருட சேவை உற்சவமும், 5ம் தேதி நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கு உற்சவம் நடந்தது. பிரம்மோற்சவத்தின் பிரதான நாளான இன்று தேர்திருவிழா உற்சவம் நடந்தது. அதை முன்னிட்டு, நேற்று அதிகாலை உற்சவர் பார்த்தசாரதி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, சர்வ அலங்காரம் நடத்தப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் பார்த்தசாரதி பெருமாள் தேரில் எழுந்தருளினார். காலை 7:00 மணிக்கு பக்தர்கள், ‘கோவிந்தா’ கோஷம் விண்ணை பிளக்க, தேரை வடம் பிடித்தனர். வேத அத்யாபக கோஷ்டியினர் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடி முன்செல்ல, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் மாடவீதிகளை தேரில் வலம் வந்த பார்த்தசாரதி பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று இரவு தோட்டத் திருமஞ்சனம் நடந்தது. நாளை காலை வெண்ணெய் தாழி கண்ணன் அலங்காரமும், இரவு குதிரை வாகன புறப்பாடும் நடக்கிறது. நாளை காலை ஆளும் பல்லக்கும், காலை 11:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், இரவு கண்ணாடி பல்லக்கு சேவையும் நடக்கிறது. அதைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.