உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் தேரோட்டம் விமரிசை

பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் தேரோட்டம் விமரிசை

பொன்னேரி: சித்திரை பிரம்மோத்சவ விழாவில், பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.


பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில், கடந்த 1ம் தேதி முதல் சித்திரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. ஏழாம் நாளான நேற்று காலை 8:00 மணிக்கு தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. சிறப்பு தீபாராதனைகள் முடிந்து, விசேஷ அலங்காரத்துடன் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் புறப்பட்ட உற்சவ பெருமான், தேரின் நிலையை அடைந்தார். அதை தொடர்ந்து, ‘ஓம் நமோ நாராயணா... ஓம் நமோ நாராயணா’ என, பக்தர்களின் கரகோஷத்துடன், தேர் நிலையில் இருந்து புறப்பட்டது.


வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 36 அடி உயர தேரில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் கரிகிருஷ்ண பெருமாள் வீற்றிருந்தார். புதிய தேரடி தெரு, தாயுமான் தெரு, தண்டபாணி தெரு, அரிஅரன் பஜார் வீதி உள்ளிட்ட மாடவீதிகள் வழியாக தேர் பவனி வந்தது. பக்தர்கள் ஆரவாரத்துடன், தேரின் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். ஸ்ரீபெரும்புதுார் ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, ராமானுஜரின் 1,009வது அவதார உற்சவத்தை தொடர்ந்து, ஆதிகேசவ பெருமாள் பிரம்மோத்சவ விழா, மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை – மாலை பல்வேறு வாகனத்தில் ஆதிகேசவ பெருமாள் எழுந்தருளி, வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். விழாவின் ஏழாவது நாளான இன்று தேர் திருவிழா நடந்தது. தேரில் ஆதிகேசவ பெருமாள் எழுந்தருளினார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !