ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் இன்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, ராமானுஜரின் 1009வது அவதார உற்சவத்தை தொடர்ந்து, ஆதிகேசவப் பெருமாள் பிரம்மோத்சவ விழா மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை பல்வேறு வாகனத்தில் ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். விழாவின் ஏழாவது நாளான இன்று தேர் திருவிழா நடந்தது. தேரில் ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளி தேரடி சாலை, காந்தி சாலை, திருவள்ளூர் மெயின் ரோடு, திருமங்கையாழ்வார் சாலை வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.