பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பால்குட விழா
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பால்குட விழா நடந்தது. கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்., 26 தொடங்கி நடந்தது. முக்கிய நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் குதிரை வாகனத்திலும், சேஷ வாகனத்தில் மண்டூக மகரிசிக்கு சாப விமோசனம் அளித்தும், தசாவதார சேவையிலும் காட்சியளித்தார். மேலும் பல்வேறு மண்டகப் படிகளில் எழுந்தருளிய பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் மே 5 அன்று இரவு திருக்கோயிலை அடைந்தார். தொடர்ந்து இன்று காலை வாணிய உறவின்முறையார்களின் சார்பில் பால்குட விழா நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், சந்தன குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை 11:00 மணி தொடங்கி காவல் தெய்வம் கருப்பணசாமி மற்றும் பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மகா தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பூ பல்லக்கில் கள்ளழகர் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.