உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் கங்கை போல புண்ணியப் பொய்கை!

மதுரையில் கங்கை போல புண்ணியப் பொய்கை!

மதுரையின் அடையாளச் சின்னங்களில் ஒன்று யானைமலை. புராதான  காலத்தில் நகரை காக்கும் பணியில்  ஈடுபட்ட நாகப்பாம்பு, நாகமலையாகவும், யானை யானைமலையாக மாறியதாக  வரலாறு.  நம் பாரம்பரியம், பண்பாடு,  கலாசாரத்தை பறைசாற்றும் வகையில், யானைமலையில் சமணர் படுகைகள், புத்தர், மகாவீரர் சிற்பங்கள், நரசிங்கம் குடை வரைக் கோயில், லாடன் கோயில், தீபத்தூண்கள், வற்றாத ஜீவஊற்றுகள் காணப்படுகின்றன. யானைமலையின் வால் பகுதியில் அமைந்த ஒய்.கொடிக்குளம் மலை அடிவாரத்தில், இயற்கை எழில்  கொஞ்சும் பசுமையான சோலைகளுக்கு மத்தியில் அமைந்த பொய்கைத் தண்ணீரை, மக்கள் புனித நீராக  கருதுகின்றனர். அருகிலுள்ள தாள  தாமரைக்குளத்து தண்ணீர் சற்று  உவர்ப்பாக உள்ளது. ஆனால் பொய்கையில் ஊறும் தண்ணீர் பால் நிறத்தில், குடிக்க குடிக்க... தெவிட்டாத  தேனமுதாய் தித்திக்கிறது.  கிராம திருவிழா, கோயில் விழா, வீட்டு விசேஷங்களுக்கு இத்தண்ணீரை, பூஜைக்கு பயன்படுத்துகின்றனர். 

வீடுகளில் குடிக்கவும் பயன்படுத்துகின்றனர். பொய்கைக்கு அருகில் மூலிகை மரங்கள், மலைக் குகைகள், வேதநின்ற நாராயண பெருமாள் கோயில், மலைச்சாமி கோயில்கள் உள்ளன.  அப்பகுதியை சேர்ந்த மலைச்சாமி கூறுகையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலை கொள்ளையடிக்க அன்னியர் திட்டமிட்டபோது, அங்கிருந்த பெருமாளை இங்கு கொண்டு வந்து, மலைக்குகைக்குள் வைத்ததாக முன்னோர்கள் கூறுவர். அதன்படி இங்கு பெருமாள் கோயில்  கட்டப்பட்டது. பொய்கைத் தண்ணீரை குடிக்க மட்டும் பயன்படுத்துகிறோம். யானைமலையை தான் தெய்வமாக சுற்றுவட்டாரத்தினர் கருதுகின்றனர். வீடு களில் முதல் குழந்தை பிறந்தால், மலைச்சாமி என பெயர் வைப்பர். எனக்கும் அப் படித்தான் பெயர் வைத்தனர், என்றார். இக்கிராமத்திற்கு செல்வோர்,  பொய்கையில் நீர்அருந்தி, பெருமாள், மலைச்சாமி தெய்வங்களை வணங்காமல் செல்வதில்லை. அதில் நாமும் விதிவிலக்கு அல்ல என்பது அங்கு சென்ற போது தெரிந்தது. எல்லாம் சரி தான். போதிய பராமரிப்பு இன்றி, இவை பாழாகி வருவது தான் வேதனை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !