உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

நெல்லிக்குப்பம் நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

நெல்லிக்குப்பம்: நடன பாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.


நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரத்தில், 1400 ஆண்டுகள் பழமையான ஹஸ்ததாளாம்பிகை உடனுறை நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் திருப்பணிகள் நடந்ததற்கான கல்வெட்டுகள் உள்ளன. அதேபோல நாயன்மார்களால் பாடல் பெற்ற கோவில் என்பதற்கான கல்வெட்டுகளும் கோவில் வளாகத்தில் உள்ளன. இங்கு பைரவருக்கு தனி சன்னதி உள்ளது சிறப்பாகும். தமிழக அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோவில் வளாகத்திலேயே, பெரிய குளம் உள்ளது. இதில் ஆனி மாதம் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது தெப்ப உற்சவம் நடக்கும். இக்கோவில் கும்பாபிஷேகம் கடைசியாக, 20 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென்பது ஆகம விதி. இதற்காக திருப்பணிகள் செய்ய ரூ.41 லட்சமும், தேர் செய்ய ரூ.43 லட்சமும் அறநிலையத்துறை ஒதுக்கியது. இதில் தேர் செய்யும் பணிகள் முடிந்து வெள்ளோட்டமும் நடத்தினர். கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகளை கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன் துவக்கினர். கோவில் கோபுரங்கள் பணி முடிந்து வண்ணம் பூசும், வேலையும் முடிந்தது. அப்போது தான் கோவிலின் மகா மண்டபத்தில் கருங்கல் தூண்களில் விரிசல் இருப்பதை பார்த்தனர்.


பழமையான கோவில் என்பதால் தொல்லியியல் துறையில் அனுமதி பெற்றே மகா மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும். கருங்கல் மண்டபத்தை முழுமையாக பிரித்து விட்டு சரி செய்ய வேண்டும் என்பதால், டெண்டர் விட தாமதமாகிறது. இதனால் மகா மண்டபம் பணிகளை துவக்காமல் உள்ளனர். அந்த பணியை முடித்தால் தான் கும்பாபிஷேகம் செய்ய முடியும். அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு மகா மண்டபம் பணியை முடித்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !