உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விசாகப்பட்டினம் கைலாசகிரியில் 65 அடி உயர பிரமாண்ட திரிசூலம்

விசாகப்பட்டினம் கைலாசகிரியில் 65 அடி உயர பிரமாண்ட திரிசூலம்

விசாகப்பட்டினம்: ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள கைலாசகிரியின் உச்சியில், 65 அடி உயர பிரமாண்ட திரிசூலத்தை, விசாகப்பட்டினம் பெருநகர மண்டல மேம்பாட்டு ஆணையம் நிறுவியுள்ளது. இதில், எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், இரவு நேரங்களில் காண்போரை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள விசாகப்பட்டினத்தில் கைலாசகிரி மலை உள்ளது.  இங்கு, சிவன் மற்றும் பார்வதி தேவியின் பிரமாண்ட சிலைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, கோவில் வளாகத்தின் 30 அடி பரப்பளவு கொண்ட மேடையில், 65 அடி உயர திரிசூலம் நிறுவப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் பெருநகர மண்டல மேம்பாட்டு ஆணையத்தால் அமைக்கப்பட்ட இந்த திரிசூலம், புயல், காற்று, நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் உறுதியான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த திரிசூலம் மற்றும் உடுக்கையில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி., விளக்குகள், இரவு நேரங்களில் ஒளிரும்போது, காண்போரை பிரமிக்க வைக்கிறது. இது குறித்து, ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், நம் நாட்டின் கலாசாரம், நம்பிக்கை மற்றும் ஆன்மிக வலிமையை இந்த புதிய திரிசூலம் பிரதிபலிப்பதாக உள்ளது. இதன்மூலம் குஜராத்தின் சோம்நாத்தைப் போல் கைலாசகிரியும் வலிமை மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறது என, குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !