தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் 2ம் ராஜராஜசோழன் சதய விழா: அரசு விழாவாக கேட்கும் வரலாற்று ஆய்வாளர்கள்
தஞ்சாவூர், இரண்டாம் ராஜராஜசோழன் உத்திட்டாதி நட்சத்திர நாளில் பிறந்தநாளை சதயவிழாவாக வரலாற்று ஆய்வாளர்கள் கொண்டாடினர்.
தஞ்சாவூர் மாவட்டம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில், 12ம் நுாற்றாண்டில், இரண்டாம் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. இக்கோவில் சோழர்களின் பெருமை கூறும் விதமாக பல்வேறு சிற்பங்கள் உள்ளன. யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக போற்றப்படுகிறது. இந்நிலையில், இரண்டாம் ராஜராஜசோழன் சித்திரை மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளில் பிறந்ததாக கோவில் கல்வெட்டு குறிப்பில் உள்ளது. அதன்படி, சித்திரை மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளில், கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் சார்பில், நிறுவனர் கோபிநாத் தலைமையில், கோவில் மூலவரான ஐராவதீஸ்வரர் மற்றும் தெய்வநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இது குறித்து சோழர் வரலாறு ஆய்வு சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது: தஞ்சையில் மாமன்னன் ராஜராஜனுக்கு சதய விழாவை மிக சிறப்பாக, அரசு விழாவாக இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதேபோல், இரண்டாம் ராஜராஜனுக்கும் அவரது சதய விழாவை, அரசு விழாவாக நடத்த வேண்டும். தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டன. இந்திய தொல்லியல் துறையும், அறநிலையத்துறையும் இணைந்து கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும். இது போன்ற செயல்களை அரசு செய்தால், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது இவ்வாறு அவர் கூறினார். இந்தநிகழ்ச்சியில், கும்பகோணம் அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் பிரமிளா மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள், மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.