வடபழனி முருகன் கோவில் மாடவீதிகளில் வாகன ஆக்கிரமிப்பால் பக்தர்கள் அவதி
வடபழனி: வடபழனி ஆண்டவர் கோவிலைச் சுற்றி, மாடவீதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களால், பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை மாநகரின் மிக முக்கியமான ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாக, வடபழனி முருகன் கோவில் திகழ்கிறது. தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசிக்க வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், ஆற்காடு சாலை வழியாக ஆண்டவர் தெருவையும், 100 அடி சாலை வழியாக அம்மன் கோவில் தெரு மற்றும் வடக்கு மாட வீதியையும், பிரதான வழிகளாக பயன்படுத்துகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில், வள்ளி திருமண மண்டபம் அருகே கார் நிறுத்துமிடமும், ஆண்டவர் தெருவில் இருசக்கர வாகன நிறுத்துமிடமும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடங்களை விடுத்து, கோவிலைச் சுற்றியுள்ள மாடவீதிகளிலும், ஆண்டவர் தெரு, அம்மன் கோவில் தெருக்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை அத்துமீறி நிறுத்துவதால், பக்தர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். குறுகலான மாட வீதிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், மற்ற வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, கோவிலைச் சுற்றியுள்ள வாகன ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.