சபரிமலை நடை அடைப்பு பிப்.,12ல் மீண்டும் திறப்பு!
சபரிமலை: மகரவிளக்கு கால பூஜைகள் முடிந்து சபரிமலை நடை நேற்று காலை அடைக்கப்பட்டது. மாசி மாத பூஜைக்காக பிப்.,12ம் தேதி நடை திறக்கப்படும். சபரிமலையில் மகரவிளக்கு விழா, கடந்த, 14ம் தேதி நடைபெற்றது. அதை தொடர்ந்து தினமும் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளலும், படிபூஜையும் நடைபெற்றது. மூன்று நாட்கள் சன்னிதானத்துக் கும், நான்காவது நாள் சரங்குத்திக்கும் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளினார். கடந்த, 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை, தினமும் இரவு, 8:00 மணிக்கு படிபூஜை நடைபெற்றது.
காளைகட்டி, இஞ்சிப்பாறை மலை, புதுச்சேரி கானம்மலை, கரிமலை, நீலிமலை, சபரிமலை, பொன்னம்பலமேடு, சிற்றம்பலமேடு, மயிலாடும்மேடு, தலப்பாறைமலை, நிலக்கல்மலை, தேவர்மலை, ஸ்ரீபாதம்மலை, கர்கிமலை, மாதங்கமலை, சுந்தரமலை, நாகமலை, கருடன்மலை ஆகிய, 18 மலைகளை குறிக்கும் வகையில் சபரிமலையில், 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மலைகளின் தேவதைகளை திருப்தி படுத்தும் வகையில், படிபூஜை நடத்தப்படுகிறது. 40 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும், இந்த பூஜையின் முன்பதிவு, 2028ம் ஆண்டு வரை முடிந்து விட்டது.
மகரவிளக்கு முடிந்த நிலையில், சன்னிதானம் வந்த, பந்தளம் மன்னர் பிரதிநிதி பரணி திருநாள் அசோகராமவர்மா ராஜாவை, தங்க வாள் கொடுத்து தேவசம்போர்டு அதிகாரிகள் வரவேற்றனர். அலங்கரிக்கப்பட்ட யானையுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அவர், 18ம் படிக்கு கீழே வந்ததும் அர்ச்சகர் பாலமுரளி நம்பூதிரி அவரை வரவேற்றார். பின், தங்கவாளுடன், 18ம் படியேறிய மன்னர் பிரதிநிதி ஸ்ரீகோயில் முன் வந்து ஐயப்பனை வணங்கினார். ஐயப்பனை காட்டில் இருந்து எடுத்து வளர்த்த பந்தளம் மன்னர் ஐயப்பனை காண வருவதாக இந்த ஐதீகம் உணர்த்துகிறது. நேற்று காலை ஏழு மணிக்கு அவரது முன்னிலையில் நடை அடைக்கப்பட்டது. அடுத்து மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை பிப்.,12ம் தேதி மாலை திறக்கும். 17ம் தேதி இரவு பத்து மணி வரை திறந்திருக்கும்.