கடலுார் பாடலீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு நேற்று விக்னேஷ்வர பூஜை நடந்தது. இன்று காலை பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. யாத்ராதானத்துடன் கூடிய பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்து, கொடி மரத்தை வந்தடைந்தது. கொடி மரத்திற்கு பூஜை முடிந்து, அஷ்டமங்களத்துடன் கூடிய ரிஷப கொடியேற்றப்பட்டது. பூஜைகளை நாகராஜ் குருக்கள் தலைமையிலான குருக்கள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை யாக சாலை பூஜை நடந்தது. வரும் 25ம் தேதி இரவு 10:00 மணிக்கு கற்பக விருட்சம், நாக வாகனங்கள் பஞ்சமூர்த்திகள் வீதியுலா, 26ம் தேதி காலை 5:30 மணிக்கு அதிகார நந்தி கோபுர தரிசனம், இரவு 10:00 மணிக்கு மேல் தெருவடைச்சான் உற்சவம், 30ம் தேதி காலை 7:30 மணிக்கு தேரோட்டம், 2ம் தேதி காலை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது.