குருவாயூர் கோவிலில் முதலமைச்சர் வி.டி. சதீசன் தரிசனம்: துலாபாரம் நேர்த்திக்கடன்
பாலக்காடு; கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் நேற்று காலை குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் குருவாயூர் கோவிலுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். காலை 7 மணியளவில் கோவிலுக்கு வந்த முதலமைச்சரை, குருவாயூர் தேவஸ்வம் தலைவர் கோபிநாத் மற்றும் நிர்வாக அதிகாரி அருண்குமார் ஆகியோர் முறைப்படி வரவேற்றனர். தேவஸ்வம் தலைவர் முதலமைச்சருக்குப் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து கோவிலுக்குள் சென்று மூலவரை வழிபட்ட முதலமைச்சர், தனது எடைக்கு நிகராக வெண்ணெய் வழங்கும் துலாபார நேர்த்திக்கடனை செலுத்தினார். இந்த வழிபாட்டிற்காக மொத்தம் 71 கிலோகிராம் வெண்ணெய் பயன்படுத்தப்பட்டது. முதலமைச்சர் வி.டி. சதீசன், மாதமொருமுறை குருவாயூர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்ட தீவிர பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவில் தரிசனத்தை முடித்துக்கொண்ட முதலமைச்சர், கேரள வருவாய்த்துறை அமைச்சர் அனில்குமாரின் மகனுடைய திருமண விழாவிலும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.