உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடகுருஸ்தலத்தில் குருபெயர்ச்சி மஹோத்சவம் கோலாகலம்

வடகுருஸ்தலத்தில் குருபெயர்ச்சி மஹோத்சவம் கோலாகலம்

 திருவொற்றியூர்; வடகுருஸ்தலமான திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி கோவிலில், இன்று குருபெயர்ச்சி மஹோத்சவம் கோலாகலமாக நடந்தது.

சென்னை, திருவொற்றியூரில், பிரசித்தி பெற்ற தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் அருகே, தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. வழக்கமாக தெற்கு நோக்கி எழுந்தருளும் தட்சிணாமூர்த்தி, இக்கோவிலில் வடக்கு நோக்கி எழுந்தருளி இருப்பதால், வடகுருஸ்தலம் என போற்றப்படுகிறது. இங்கு, 10 அடி உயரத்தில் காட்சி தரும் யோக தட்சிணாமூர்த்தியை வழிப்பட்டால் கல்வி, வேலைவாய்ப்பு, குழந்தை பாக்கியம், குடும்ப ஒற்றுமை, பணவரவு, மன நிம்மதி, பதவி உள்ளிட்டவை கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோவிலில், குருபெயர்ச்சி மஹோத்சவம் இன்று கோலாகலமாக நடந்தது. மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு, குருபகவான் நேற்று முன்தினம் பிரவேசித்தார். இதையொட்டி, நேற்று காலை மற்றும் மாலையில், லட்சார்ச்சனை நடந்தது. நேற்று காலை, 8:00 – 12:00 மணிக்குள்ளாக, கணபதி ஹோமம், குருபெயர்ச்சி பரிகார ஹோமம் நடந்தது. முன்னதாக, கோவில் வளாகத்தில் கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு, விசேஷ யாகம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாரதனை நடந்தது. உற்சவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பரிகார பூஜையில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.  இன்று காலை, 10:00 – 12:00 மணிவரை ருத்ராபிஷேகம், மாலை, 5:00 – 8:00 மணி வரை லட்சார்ச்சனையும் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் உதவி கமிஷனர் நற்சோனை தலைமையிலான கோவில் ஊழியர்கள் செய்துள்ளனர்.

திருவள்ளூர்  பூங்கா நகரில் உள்ள யோகா ஞான தட்சிணாமூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சி முன்னிட்டு மூலவர் யோக ஞான தட்சிணாமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !